வதந்திகளுக்கு வையுங்கள் முற்றுப்புள்ளி, தயங்காமல் எடுங்கள் தடுப்பூசி - அரசு மருத்துவரின் அறிவுரை
கொரோனா தடுப்பூசி குறித்த வீண் வதந்திகளை நம்பாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள அனைவரும் முன்வர வேண்டும் என தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜிநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனாவின் அறிகுறி, அதன் படிநிலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அவர் விளக்குகிறார்.
நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை அதி தீவிரமாகப் பரவி வரும் நிலையில், ஆக்சிஜன் இருப்பு , கொரோனா தடுப்பூசி தொடர்பான பல்வேறு வதந்திகள் சமூக வலைதலங்களில் பரவி தேவையின்றி மக்களை குழப்பி வருவதையும் காண முடிகிறது.
தேவையற்ற அச்சம் கொள்ளாமல் கொரோனாவின் ஆரம்ப அறிகுறிகளை உணர்ந்து உடனடி சிகிச்சை எடுத்துக் கொண்டால் அதிலிருந்து தப்பிக்கலாம் என்கிறார் தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜிநாதன்.
ஆரம்பகட்ட அறிகுறிகள் எப்படி இருக்கும் என்பதையும் எளிமையாக விளக்குகிறார்.
சுவை உணர்வு குன்றுதல், வாசனை அறியாமல் போவது, மூச்சுத்திணறல் உள்ளிட்ட அறிகுறிகள் இருப்பவர்கள் மருத்துவர்களை அணுக வேண்டுமே தவிர, எக்காரணம் கொண்டு சுயமருத்துவம் எடுத்துக் கொள்ள கூடாது என்றும் மருத்துவர் பாலாஜிநாதன் எச்சரிக்கிறார்.
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 10 ஆயிரம் லிட்டர் திரவ ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் வசதி உள்ளதாகக் கூறும் மருத்துவர் பாலாஜிநாதன், நாளொன்றுக்கு 1500 லிருந்து 2500 லிட்டர் ஆக்சிஜன் மட்டுமே தேவைப்படுவதால், ஆக்சிஜன் பற்றாக்குறை இன்றி சிகிச்சை அளிக்க முடிவதாகவும் தெரிவிக்கிறார்.
கொரோனா தடுப்பூசி குறித்த வீண் வதந்திகளை நம்பாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள அனைவரும் முன்வர வேண்டும் என மருத்துவர் பாலாஜிநாதன் வேண்டுகோள் விடுக்கிறார்.
ஒருவருக்கு நுரையீரல் பாதிப்பு இருக்கிறதா என்பதை அறிவதற்கு 6 நிமிட நடைபயிற்சியே போதும் என்கிறார் மருத்துவர் பாலாஜிநாதன்.
Comments