ஆக்சிஜனுக்கான கலால் வரி நீக்கம் : தடுப்பூசிகளுக்கும் கலால் வரி நீக்கம்!
ஆக்சிஜன் மற்றும் அதன் உற்பத்தி பொருட்களுக்கான இறக்குமதி கலால் வரியை நீக்கம் செய்து பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். மேலும் கொரோனா தடுப்பூசிகளுக்கான கலால் வரியையும் நீக்கி உத்தரவிட்டுள்ளார்.
ஆக்சிஜன் விநியோகத்தை சீர் செய்வது தொடர்பாக, கடந்த சில நாட்களாக பிரதமர் மோடி ஆய்வு கூட்டங்களை முன்னெடுத்து உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். இந்நிலையில், டெல்லியில், ஆக்சிஜன் விநியோகத் தேவைக்காக பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் குறித்த உயர்மட்டக் ஆய்வுக் கூட்டம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, வெளியிடப்பட்டு அறிவிப்பில், ஆக்சிஜன் இறக்குமதிக்கான அடிப்படை கலால் வரியும், பிரணாவாயுக்கான சுகாதார செஸ் வரியும், அடுத்த 3 மாதங்களுக்கு, முழுமையாக நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக்சிஜன் கேனிஸ்டர் எனப்படும், நோயாளிகளே பயன்படுத்திக் கொள்ளத்தக்க வகையிலான சிறியவகை ஆக்சிஜன் பாட்டில் இறக்குமதிக்கு கலால் வரி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
ஆக்சிஜனை நிரப்பி வைப்பதற்கான சிலிண்டர்கள், ஆக்சிஜனை நிரப்புவதற்கான இயந்திரங்கள், ஆக்சிஜனை சேமித்து வைக்கும் டேங்குகள் ஆகியவற்றிற்கான கலால் வரி நீக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, கொரோனா தடுப்பூசி இறக்குமதிக்கான கலால் வரியும் அடுத்த 3 மாதங்களுக்கு நீக்கப்படுவதாக, பிரதமர் அறிவித்துள்ளார்.
ஆக்சிஜன் மற்றும் அதன் உற்பத்திக்கான பொருட்கள், தடுப்பூசிகளுக்கான இறக்குமதி கலால் வரி நீக்க நடைமுறைகள் உடனடியாக நிறைவேற்றப்படுவதை, வருவாய்த்துறையினர் உறுதி செய்ய வேண்டும் என்றும் பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.
மருத்துவமனைகளுக்கும், நோயாளிகளின் வீடுகளுக்கும், தரமான மருத்துவ ஆக்சிஜனை வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
ஆக்சிஜன், தடுப்பூசி உள்ளிட்டவற்றின் இறக்குமதி கலால் வரி நீக்கப்பட்டிருப்பதால், அவை சகாய விலையில், பொதுமக்களுக்கு கிடைக்க வழிஏற்படும் என மத்திய அரசு நம்பிக்கை வெளியிட்டிருக்கிறது.
Comments