இரவு நேர ஊரடங்குடன் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு: திங்கள் காலை வரை முழுமுடக்கம்
இரவு நேர ஊரடங்குடன், ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கும் சேர்வதால், இன்று இரவு 10 மணி முதல் திங்கட்கிழமை காலை வரை தமிழகம் முழுவதும் தளர்வுகளற்ற முழுமுடக்கம் அமலுக்கு வருகிறது. மீறுவோர் மீது வழக்கு பதிவு, அபராதம் விதிப்பு, வாகனம் பறிமுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன.
கொரோனா பரவல் இரண்டாம் அலையை கட்டுக்குள் கொண்டுவர, தமிழகம் முழுவதும் கடந்த 20-ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை அமலில் இருக்கும் இந்த ஊரடங்கில், பொதுமக்கள் நடமாட்டம் முற்றாகத் தடை செய்யப்பட்டு, விலக்கு அளிக்கப்பட்டவை தவிர, தனியார் மற்றும் பொது போக்குவரத்தும் அனுமதிக்கப்படுவதில்லை. இதனால் தொலைதூரப் பேருந்துகள் பகலில் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு இந்த ஆண்டில் முதல் முறையாக நாளை நடைமுறைக்கு வருகிறது. இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட், காய்கறி கடைகள், டாஸ்மாக் கடைகள், சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள் உள்பட அனைத்தும் மூடப்பட்டிருக்கும். உணவகங்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
பால் விநியோகம், ஊடகங்கள், அத்தியாவசிய தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் உள்ளிட்ட மருத்துவத்துறை சார்ந்த பணிகள், அனைத்து சரக்கு வாகனங்கள், வேளாண் விளை பொருட்களை எடுத்துச்செல்லும் வாகனங்கள், எரிபொருள் எடுத்துச்செல்லும் வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு முறையாகக் கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க, சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சோதனைச்சாவடிகளில் காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் சுகாதாரத் துறை அலுவலர்கள் வாகன தணிக்கை பணிகளில் ஈடுபடுவார்கள். விதிகளை மீறுவோர் மீது வழக்குப்பதிவு செய்யப்படுவதோடு, வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
Comments