பத்திக் கொண்ட ப்ரீ பயர் சண்டை; கையில் விழுந்த கடி..! சோடாபாட்டிலை உடைத்து விபரீதம்
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே ப்ரீ பயர் விளையாடிய இரு குழுவினருக்கு இடையே எற்பட்ட மோதலில் சிறுவர்கள் ஒருவரை ஒருவர் கடித்து தாக்கிக் கொண்டதோடு சோடா பாட்டிலால் அடித்துக் கொண்டனர்.
தமிழகத்தில் கடந்த ஓராண்டுக்கு மேலாக கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் செயல்படவில்லை. ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு செல்போன் வாங்கி கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
பலர் இதனை கல்விக்காக பயன்படுத்தினாலும், சிலர் கல்வியைத் தாண்டி ஆன்லைன் விளையாட்டுகளுக்கு பயன்படுத்தி அதனால் அடிதடி, மோதல் என ஒரு பக்கம் வம்பு வளர்த்துக் கொண்டிருக்கின்றனர்.
ப்ளுவேல்,பப்ஜி, டிக்டாக் போன்றவற்றை அரசு தடை செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் ஃப்ரீபயர் போன்ற விளையாட்டு செயலிகள் வீணான வில்லங்கத்தை உருவாக்கி வருகின்றது. மொட்டை வெயிலிலும் , நடுநிசியிலும் படிப்பை மறந்து ப்ரீபயர் விளையாடி வருகின்றனர் கிராமப்புறச்சிறுவர்கள்
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே ஆன்லைன் விளையாட்டான ஃப்ரீ ஃபயர் மூலமாக ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது. ஃப்ரீ பையர் விளையாட்டில் ஒருவர் ஐடியை மற்றொருவர் பயன்படுத்தும் விதம் இடம் பெற்றுள்ளதால், அதனைப் பயன்படுத்தி ஒரு சிறுவன் , தன்னுடன் விளையாடிய மற்றொரு சிறுவனின் ஐடியில் அவனது பெயரை மாற்றி அசிங்கமான பெயர் வைத்ததாக கூறப்படுகின்றது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த சிறுவன், தனது பெயரை மாற்றிய சிறுவனின் ஐடிக்கு சென்று அச்சிறுவன் விளையாட்டில் வெற்றி பெற்று சேமித்து வைத்திருந்த காயின்களை தனது கணக்கிற்கு மாற்றியதாக கூறப்படுகிறது.
இதனால் இரு சிறுவர்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அந்த வாக்குவாதம் முற்றி அடிதடியானது. இதில் ஒருவர் மீது ஒருவர் சோடாபாட்டில் வீசிய நிலையில் ஒரு சிறுவனை மற்றொரு சிறுவன் கையில் கடித்து வைத்ததால் காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினான்.
மாணவர்களின் ஆன்லைன் கல்விக்கு இடையூறாகவும், மோதலை ஏற்படுத்தும் வகையிலும் செல்போனில் வலம் வரும் ப்ரீ பயர் உள்ளிட்ட ஆபத்தான விளையாட்டுக்களை நிரந்தரமாக தடை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் பெற்றோரின் கோரிக்கையாக உள்ளது
Comments