கடத்தல் மாஃபியா மாடர்ன் சொர்ணாக்கா மிரட்டல் ஆடியோ..! சூது கவ்விய பின்னணி

0 8391
கடத்தல் மாஃபியா மாடர்ன் சொர்ணாக்கா மிரட்டல் ஆடியோ..! சூது கவ்விய பின்னணி

சென்னை கோயம்பேட்டில் மோசடி காப்பீடு நிறுவனம் ஒன்றில் புகுந்த கணவன் மனைவி, தங்களை போலீஸ் அதிகாரிகள் எனகூறி அங்கிருந்த ஒருவரை கடத்திச்சென்று அவரை பணயமாக வைத்து பணம் கேட்டு மிரட்டிய ஆடியோ வெளியாகி உள்ளது. சூதுகவ்வும் சினிமாபாணியில் கடத்தலில் ஈடுபட்ட மாடர்ன் சொர்ணாக்கா குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள சாய்டவர்ஸ் அடுக்குமாடி கட்டிடத்தில் ஸ்ரீராம் இன்சூரன்ஸ் என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகின்றது.

இந்த காப்பீட்டு நிறுவனத்தில், சைதாப்பேட்டையை சேர்ந்த பால்ஜோசப் என்பவர் டீம் லீடராக பணி புரிந்து வருகின்றார். காப்பீடு எடுத்தால் அதனை வைத்து கடன் கொடுப்பதாகக் கூறி கீழ்பாக்கம் கிரிதரன் அயனாவரம் சுவேதா ஆகிய இருவரையும் காப்பீடுத் திட்டத்தில் சேர்த்துள்ளனர்.

இருவரும் அந்த திட்டத்தின் படி தலா 52 ஆயிரம் ரூபாய் வீதம் பணம் செலுத்தி பாலிசி எடுத்துக் கொண்டதாக கூறப்படுகின்றது. பின்னர் தங்களுக்கு லோன் தருமாறு இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் கேட்டுள்ளனர்.

இதற்கு நிறுவன ஊழியர் பால்ஜோசப் குறைந்தபட்சம் 6 மாதம் பாலிசி தொகை செலுத்தினால் மட்டுமே கடன் தொகை தரமுடியும் எனவும், ஆகையால் தற்பொழுது உங்களுக்கு கடன் தர வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பாலிசிதாரர்கள் தாங்கள் கட்டிய பணத்தை திருப்பி தருமாறு கேட்டனர். நிர்வாகம் தரப்பில், ஒரு வருடம் முடிந்த பின்னரே பாலிசி தொகை திருப்பி தரப்படும் என கறாராக கூறியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பாலிசிதாரர்களான கிரிதரனும், ஸ்வேதாவும் இன்சூரன்ஸ் அலுவலகத்திற்குள் நுழைந்து தங்களை போலீஸ் அதிகாரிகள் எனக்கூறியுள்ளனர். விசாரிக்க வேண்டும் என மிரட்டி பால்ஜோசப்பை அலுவலகத்தில் இருந்து தரதரவென இழுத்து சென்று காரில் ஏற்றிச்சென்றுள்ளனர்.

இன்சூரன்ஸ் மேலாளர் பிரனவ் என்பவருக்கு போன் செய்து தாங்கள் கட்டிய பணத்தை திருப்பி கொடுத்தால் தான் ஊழியர் பால்ஜோசப்பை விடுவிக்க முடியும் இல்லையென்றால் அவரது மனைவியை விபச்சார வழக்கில் கைது செய்வோம் என கடுமையாக மிரட்டியுள்ளனர்

பணத்தை ரெடி செய்வதாக கூறி காலதாமதப்படுத்திய மேலாளர் பிரனவ்வை சொர்னாக்கா பாணியில் கடுமையான வார்த்தைகளால் மிரட்டியுள்ளார் மார்டன் கிட்னாப்பர் ஸ்வேதா.

இதனால் பயந்து போன மேலாளர் ப்ரனவ் அவர்கள் கட்டிய பணத்தை திருப்பி கொடுத்துள்ளார். ஆனால் பணத்தை திருப்பி கொடுத்த பின்னரும், கடத்தப்பட்ட ஊழியர் திரும்பி வராததால் அவருக்கு போன் செய்த போது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததால் பதற்றமடைந்த இன்சூரன்ஸ் கம்பெனி மேலாளர் பிரனவ் இது குறித்து கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட நிலையில், கடத்தப்பட்ட ஊழியர் பால்ஜோசப்பை தேனாம்பேட்டை அருகே, கடத்தல் கும்பல் விட்டு விட்டு சென்றது.

போலீஸ் எனக்கூறி கடத்தலில் ஈடுபட்ட கிரிதரன், ஸ்வேதா ஆகிய இருவரும் கணவன் மனைவி என்பதும், காப்பீடு நிறுவனத்தில் ஆளுக்கு 5 லட்சம் ரூபாய் கடன் வாங்கி விட்டு கம்பியை நீட்டும் திட்டத்தில் பாலிசி எடுத்ததும் தெரியவந்தது. ஆனால் காப்பீடு நிறுவனமே மோசடியாக பணத்தை சுருட்ட நினைத்ததால் தங்கள் பணத்தை பெறுவதற்காக இந்த கடத்தல் வேலையில் ஈடுபட்டது அம்பலமானது.

கடத்தல் புகாருக்குள்ளான இருவரும் பேசிய குரல்பதிவில் ஏற்கனவே பல கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் போல பேசி இருப்பதால் அவர்களை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

அதே நேரத்தில் காப்பீட்டு நிறுவன முகவர்கள் காப்பீட்டு திட்டங்களை முழுமையாக வாடிக்கையாளர்களிடம் விவரிக்காமல் கமிஷனுக்கு ஆசைப்பட்டு பாலிசி தாரர்களை வளைத்துப் போட்டால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இந்த சம்பவமே சான்று..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments