தேவைக்கு அதிகமாகவே உற்பத்தி: தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை - தமிழக அரசு

0 4006

தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ள தமிழக அரசு, ஆக்சிஜன் உற்பத்தி உபரியாக இருப்பதால், ஆந்திரா, தெலுங்கானாவுக்கு வழங்கியதால் தமிழகத்திற்கு பாதிப்பு எதுவும் இல்லை என தெரிவித்துள்ளது.

ரெம்டெசிவர் மருந்துகள் தனிநபர்களுக்கு வழங்கப்படுவதாகவும், தமிழக அரசின் அனுமதி பெறாமல் வெளி மாநிலங்களுக்கு ஆக்சிஜன் அனுப்பப்படுவதாகவும், வெண்டிலேட்டர் பற்றாக்குறை உள்ளதாகவும் வெளியான செய்திகளின் அடிப்படையில், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தாமாக முன்வந்து பொது நல வழக்காக விசாரித்தது. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பிற்பகலில் விளக்கம் அளித்த தமிழக அரசு, மாநிலத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என தெரிவித்தது.

தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 400 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுவதாகவும், நாள் ஒன்றுக்கு 250 மெட்ரிக் டன் ஆக்சிஜன் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் தமிழக அரசு கூறியுள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு 65 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வழங்கியதால் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை, தனியார் மருத்துவமனைகளில் ரெம்டெசிவிர் மருந்து கையிருப்பு இல்லை என்றால் அரசிடம் பணம் செலுத்தி பெற்று கொள்ளலாம், அரசு மருத்துவமனைகளில் உள்ள 9600 வெண்டிலேட்டர்களில் 5887 வெண்டிலேட்டர்கள் கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது, தனியார் மருத்துவமனைகளில் உள்ள 6000 வெண்டிலேட்டர்களில் 3000 வெண்டிலேட்டர்கள் கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது என்பன உள்ளிட்ட விவரங்களையும் தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது.

மே 2ஆம் தேதி  வாக்கு எண்ணிக்கை நாளில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும், தமிழகத்தில் ரெம்டெசிவிர், ஆக்சிஜன், வெண்டிலேட்டர் மற்றும் தடுப்பு மருந்துகள் தட்டுப்பாடு ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும், அவசர காலங்களில் துரிதமாக முடிவெடுக்க சுதந்திரமான சிறப்பு அதிகாரி குழுவை நியமிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், தடுப்பு மருந்துகளின் விலையை குறைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என அறிவுறுத்தினர். வழக்கு விசாரணை ஏப்ரல் 26ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments