தமிழக பேருந்துகளில் காற்றில் பறக்கும் கொரோனா விதிகள்

0 6555
தமிழக பேருந்துகளில் காற்றில் பறக்கும் கொரோனா விதிகள்

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக  பேருந்துகளில் பயணிகள் அமர்ந்து பயணம் செய்ய மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை, திருவள்ளூர், தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் முகக்கவசம் அணியாமலும், நின்றுகொண்டும் பயணம் செய்து வருகின்றனர்.

சென்னை மாநகர பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் அலட்சியமாக செயல்பட்டு வருகின்றனர். புளியந்தோப்பு, புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இயக்கப்படும் மாநகர பேருந்துகளில் அதிகளவில் பயணிகள் ஏறுவதாகவும், பயணிகள் முகக்கவசம் அணியாமல் பயணம் செய்வதாகவும் புகார் எழுந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியிலிருந்து அம்பத்தூர் வழியாக கோயம்பேடு செல்லும் மாநகர பேருந்துகளில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. பேருந்தில் நிறுத்தம் வாரியாக முறையாக டிக்கெட் கொடுக்க முடியாததால் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் பேருந்தை நிறுத்தி நடத்துனர் பயணிகளிடம் டிக்கெட் பணத்தை வசூல் செய்தார். குறிப்பாக பேருந்தின் படிக்கட்டு வரை கூட்ட நெரிசல் மிகுந்து காணப்பட்டது.

தஞ்சாவூரில் இருந்து பிற பகுதிகளுக்கு செல்லக்கூடிய நகர மற்றும் புறநகர் பேருந்துகளில் அரசின் கட்டுப்பாடுகளை மீறி பயணிகள் முகக்கவசம் அணியாமலும், நின்றுகொண்டும் பயணம் செய்து வருகின்றனர். குறிப்பாக தனியார் பேருந்து நடத்துனர்கள் முகக்கவசம் அணியாத பயணிகளை பேருந்துகளில் அனுமதிப்பதாகவும், அதிகளவிலான பயணிகளை பேருந்தில் ஏற்றுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

கொரோனா பரவலால் அரசு பல்வேறு கட்டுபாடுகளை விதித்துள்ள நிலையில், சேலத்தில் அதிக பயணிகளை ஏற்றி வந்த தனியார் பேருந்துக்கு ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அயோத்தியா பட்டினத்தில் இருந்து சேலம் பழைய பேருந்து நிலையத்திற்கு வந்த விஜயலட்சுமி என்ற தனியார் பேருந்தில், கட்டுபாடுகளை மீறி அதிக பயணிகளை ஏற்றி வந்துள்ளனர். இதனால் அப்பேருந்துக்கு அபராதம் விதித்ததுடன், முக கவசம் அணியாமல் பயணித்தவர்களிடமும் 200 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படடது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments