தமிழகத்தில் இருந்து ஆக்சிஜன், ரெம்டிசிவிர் மருந்து வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பு - தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றது உயர்நீதிமன்றம்

0 4335

தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் மற்றும் ரெம்டிசிவிர் மருந்துகள் பிற மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவது தொடர்பாக பிற்பகலில் விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா இரண்டாம் அலை மிக தீவிரமாக உள்ள நிலையில் சில மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதேபோல, ரெம்டிசிவிர் மருந்துக்கு தேவை அதிகரித்துள்ளதால், கள்ளச்சந்தை விற்பனை, பதுக்கலும் அதிகரித்துள்ளது. இந்த சூழலில், தமிழகத்தில் ரெம்டிசிவர் மருந்துகள் தனிநபர்களுக்கு வழங்கப்படுவதாகவும், ஆக்சிஜன் உற்பத்தி போதுமான அளவிற்கு உள்ள நிலையில், தமிழக அரசின் அனுமதி பெறாமல் வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுவதாகவும், வெண்டிலேட்டர் பற்றாக்குறை உள்ளதாகவும் செய்தி வெளியானது.

இதை அடிப்படையாக கொண்டு, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தாமாக முன்வந்து பொது நல வழக்காக விசாரணைக்கு எடுத்தது. தமிழகத்தில் ஆக்சிஜன் மற்றும் ரெம்டிசிவிர் மருந்துகள் பிற மாநிலங்களுக்கு அனுப்பப்படுவது தொடர்பாக தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். மற்ற மாநிலங்களில் உள்ள நிலை தமிழகத்துக்கும் ஏற்படக்கூடாது என்பதை கருத்தில் கொண்டே தற்போதைய நிலை குறித்து அறிய விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

தற்போதைய சூழலில் இந்த வழக்கை தாமாக முன் வந்து எடுத்து விசாரிப்பதன் நோக்கம் மேலும் குழப்பம் ஏற்படுத்துவது அல்ல, குழப்பத்தை போக்குவதுதான் என நீதிபதிகள் தெளிவுபடுத்தினார். இந்த வழக்கு குறித்து தமிழக அரசிடம் விளக்கம் பெற்று, தமிழகத்தில் ஆக்சிஜன் தேவை உள்ளிட்ட விவரங்களை இன்று பிற்பகலில் தெரிவிக்கும்படி அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயனிடம்  நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments