ஆக்சிஜன், ரெம்டிசிவர் தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசு அவசர நடவடிக்கை
ஆக்சிஜன் மற்றும் ரெம்டிசிவர் மருந்துக்கான தட்டுப்பாடு நீடிக்கும் நிலையில் பத்து லட்சம் சிலிண்டர்களையும், பதினோரு லட்சம் ரெம்டிசிவர் குப்பிகளையும் மாநில அரசுகளுக்கு வழங்க மத்திய அரசு அவசர நடவடிக்கை எடுத்து உள்ளது. பல்வேறு மாநிலங்களுக்கு அவற்றை எடுத்துச் செல்லும் பணியில் விமானப்படை ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
மகாராஷ்ட்ரா, டெல்லி, குஜராத், உத்தரப்பிரதேசம், தமிழ்நாடு உள்பட 19 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. ஒவ்வொரு நகரத்திலும் தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் தினமும் புதிதாக பாதிப்புக்குட்பட்ட பல ஆயிரம் பேர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதனால் மருத்துவ ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் ரெம்டிசிவர் தட்டுப்பாடு நிலவுதாக மாநில அரசுகள் தெரிவித்துள்ளன.
இதையடுத்து பத்து லட்சம் ஆக்சிஜன் சிலிண்டர்களையும் 11 லட்சம் ரெம்டிசிவர் குப்பிகளையும் மாநிலங்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
பாதிப்பு அதிகமாக உள்ள மகாராஷ்ட்ரா, டெல்லி உள்ளிட்ட இடங்களுக்கு மருந்துகளை விரைவில் எடுத்துச் செல்லவும் நோயாளிகளை மேல் சிகிச்சைக்காக பெருநகரங்களுக்கு கொண்டு செல்லவும் விமானப்படையின் உதவியை மத்திய அரசு நாடியுள்ளது.
ஆக்சிஜன் நிரப்ப காலி டேங்கர் பெட்டிகளுடன் சிறப்பு ரயில்கள் லக்னோவில் இருந்து பொக்காரோ மற்றும் ஹால்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே ரெம்டிசிவிர் மருந்துக்கு தட்டுப்பாடு இருப்பதால், அதன் உற்பத்தியை இருமடங்காக அதிகரித்திருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் சுமார் 38 லட்சம் குப்பிகள் மருந்து உற்பத்தியாளர்களால் மாதந்தோறும் உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த எண்ணிக்கை 74 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 14ம் தேதி வெளிநாடுகளுக்கு ரெம்டிசிவிர் ஏற்றுமதி செய்யவும் மத்திய அரசு தடை விதித்துள்ளது.
Comments