மத்திய அரசு நிதியை நம்பி வங்கிகளிடம் கடன் வாங்கியுள்ளோம் - சீரம் நிறுவனத் தலைவர் அடார் பூனாவாலா
கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்க மத்திய அரசின் நிதியுதவி கிடைக்கும் என்கிற நம்பிக்கையில், வங்கிகளிடம் கடன் வாங்கியுள்ளதாக சீரம் நிறுவனத் தலைவர் அடார் பூனாவாலா தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு மருந்து உற்பத்தியை அதிகரிக்க மூவாயிரம் கோடி ரூபாய் வேண்டும் என மத்திய அரசிடம் சீரம் நிறுவனம் தெரிவித்திருந்தது. சீரம் நிறுவனத்துக்கு மூவாயிரம் கோடி ரூபாய், பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு ஆயிரத்து ஐந்நூறு கோடி ரூபாய் நிதி வழங்க மத்திய நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்நிலையில் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த சீரம் நிறுவனத் தலைவர் அடார் பூனாவாலா, அரசின் நிதியுதவி மூவாயிரம் கோடி ரூபாய் தங்களுக்குக் கிடைக்கும் என நம்புவதாகத் தெரிவித்தார். அதுவரை காத்திராமல் உற்பத்தியை அதிகப்படுத்துவதற்காக வங்கிகளிடம் கடன் வாங்கிவிட்டதாகவும் குறிப்பிட்டார்.
Comments