கடத்திச் செல்லப்பட்ட ரியல் எஸ்டேட் உரிமையாளர் மீட்பு..இரிடியம் மோசடி கும்பல் கடத்தி மிரட்டியதா? போலீஸ் தீவிர விசாரணை
விழுப்புரத்தில் காரில் கடத்திச் செல்லப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர், 2 நாட்களுக்குப் பின் திருப்பூரில் மீட்கப்பட்டார். இரிடியம் மோசடி விவகாரத்தில் அவர் கடத்தப்பட்டாரா என பெண் உள்பட 5 பேரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை ஈக்காட்டுத்தாங்கல் பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவன உரிமையாளர் சிவன், கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது தொழில் நண்பர்களான வெங்கடேசன், சம்பத், ராஜேந்திரா ஆகியோருடன் விழுப்புரம் சென்றார்.
அப்போது, அங்கு வந்த மதுரையைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவன உரிமையாளர் நாகராஜ், நிலம் பார்க்க செல்வதற்காக தனது காரில் சிவன் மற்றும் ராஜேந்திராவை ஏற்றிக்கொண்டு, கண்டாச்சிபுரம் நோக்கி புறப்பட்டார். அந்த காரை சிவனுடன் சேர்ந்து வந்த வெங்கடேசன், சம்பத் ஆகிய இருவரும் பின்தொடர்ந்து சென்றனர். அப்போது, மற்றொரு காரில் அங்கு வந்த 5 பேர், துப்பாக்கி முனையில் சிவன் மற்றும் ராஜேந்திராவை கடத்திச் சென்றனர்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த வெங்கடேசன், சம்பத் ஆகியோர் கண்டாச்சிபுரம் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனர்.
மறுநாள் திங்கள்கிழமை அதிகாலை கடத்தப்பட்ட இருவரில் ஒருவரான ராஜேந்திராவை, சேலம் மாவட்டம், ஆத்தூரில் அந்த கும்பல் இறக்கி விட்டுள்ளது. இதையடுத்து, அவரிடம் நடத்திய விசாரணையில், கடத்தப்பட்ட சிவனை, மர்ம நபர்கள் ஈரோடு அழைத்துச் சென்றதாக தெரிவித்தார். அதன்பேரில், தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கிய போது துப்பாக்கி முனையில் காரில் கடத்திச் செல்லப்பட்ட சிவன் திருப்பூர் மாவட்டத்தில் இருப்பதை அறிந்து இன்று அதிகாலையில் அவரை மீட்டனர்.
மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக, நாகராஜ், செந்தில், செந்தில்நாதன், கார்த்திகேயன் மற்றும் சத்யா என்ற பெண் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து, கண்டாச்சிபுரம் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து, தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கும்பலை சேர்ந்த செந்தில் ஏற்கனவே இரிடியம் மோசடி வழக்கில் கைதாகி இருப்பதால், அதே போன்று மோசடி செய்து மிரட்டி பணம் பறிப்பதற்காக சிவன் கடத்தப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் அவர்கள் வைத்திருந்து போலி துப்பாக்கி என்பதும் தெரியவந்துள்ளது.
Comments