தமிழகத்தில் மருத்துவ சிகிச்சைகளுக்கு தேவையான ஆக்சிஜன் கையிருப்பில் உள்ளன - தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் தகவல்
தமிழகத்தில் மருத்துவ சிகிச்சைகளுக்கு தேவையான ஆக்சிஜன் கையிருப்பில் உள்ளது என்றும், உபரியாக உள்ள ஆக்சிஜனை அண்டை மாநிலங்களுக்கு அனுப்பினாலும் தட்டுப்பாடு ஏற்படாது என்று தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் தெரிவித்துள்ளது.
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பயன்படுத்தப்படும் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு பல்வேறு மாநிலங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன், மற்ற மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவது குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்தன.
இது தொடர்பாக தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தில் ஒரு நாளைக்கு 400 மெட்ரிக் டன் அளவிற்கு திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் திறன் உள்ளதாகவும், 1200 டன்கள் வரை சேமித்து வைக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது மருத்துவ சிகிச்சை சார்ந்த தேவைகளுக்கு நாளொன்றுக்கு 240 டன் ஆக்சிஜன் மட்டுமே தேவைப்படுவதாக அதில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
மத்திய அரசின் உத்தரவின் அடிப்படையில், ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்ள அண்டை மாநிலங்களுக்கு தமிழகத்தில் இருந்து ஆக்சிஜன் அனுப்பப்பட்டு வருகிறது என்றும், அவ்வாறு அனுப்பினாலும் போதிய ஆக்சிஜன் கைவசம் இருப்பதால் தமிழகத்தில் எதிர்காலத்தில் தட்டுப்பாடு ஏற்படாது என்றும் மருத்துவ பணிகள் கழகம் விளக்கம் அளித்துள்ளது.
Comments