சிறுமியை மிரட்டி சீரழித்த டிக்டாக் பிரபலம்... திஷா போலீசாரிடம் சிக்கிய ஃபன்பக்கெட் பார்கவ்!

0 85611
கைது செய்யப்பட்ட டிக்டாக் பிரபலம் பார்கவ்

விசாகப்பட்டிணத்தில் ’ஃபன்பக்கெட் பார்கவ்’ என்ற டிக்டாக் பிரபலம், 14 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததைத் தொடர்ந்து, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவன் சிப்பாடா பார்கவ். டிக்டாக் பிரபலமான பார்கவ், தனது நகைச்சுவையான வீடியோக்கள் வெளியிட்டு வந்ததால் ’ஃபன்பக்கெட் பார்கவ்’ என்று பலராலும் அறியப்பட்டு வந்தான். ”ஓ மை காட்... ஓ மை காட்..“ என்று இவன் பேசும் வீடியோக்களால் இளைஞர்கள் மத்தியில் பிரபலமான பார்கவ், தற்போது உண்மையிலேயே ’ஓ மை காட்’ என்று கூறியபடி தான் செய்த குற்றத்திற்காக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.

கடந்தாண்டு டிக்டாக் தடைசெய்யப்பட்டாலும், அதன்மூலம் கிடைத்த புகழினால் பார்கவ், யூடிபிலும் வீடியோக்களை வெளியிட்டு வந்தான். இந்தநிலையில் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமியுடன் பழகி வந்துள்ளான். ஒருகட்டத்தில் பார்கவ் அந்த சிறுமியிடம் தனது காதலை கூறியுள்ளான். அதற்கு அந்த சிறுமி மறுத்துள்ளார். இதனையடுத்து, சிறுமியிடம், ”உனது அந்தரங்கமான புகைப்படங்களும், வீடியோக்களும் என்னிடம் இருக்கிறது. நான் சொல்வதை ஏற்க மறுத்தால், அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன்” என்று மிரட்டி உள்ளான். இதனைத்தொடர்ந்து பயந்து போன அந்த சிறுமியை, பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.

இந்த நிலையில் அந்த சிறுமி நான்கு மாதம் கர்ப்பிணியாக உள்ளது அவரது குடும்பத்தினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து, கடந்த 16ம் தேதி விசாகபட்டிணத்தில் உள்ள பெண்டூர்த்தி காவல் நிலையத்தில் டிக்டாக் புகழ் பார்கவ் மீது புகாரளித்தனர். இதனைத் தொடர்ந்து ஐதராபாத்தின் கொம்பள்ளியில் இருந்த பார்கவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், அவனிடமிருந்து கார் மற்றும் மொபைல் போன்றவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த பார்கவ் மீது போக்சோ உட்பட பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்டது சிறுமி என்பதால், ஆந்திராவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வழக்கை விசாரித்து வரும் விசாகப்பட்டினத்தில் உள்ள திஷா போலீசாரிடம் பார்கவ் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து விசாகப்பட்டினம் மாஜிஸ்திரேட் முன்பு பார்கவ் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, அவனை வரும் மே 3ம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளார். மேலும் சிறுமி வாழ்க்கையை சீரழித்ததால் காவலில் வைக்கப்பட்டுள்ள பார்கவை விசாரித்து கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று சமூக வலைத்தளத்தில் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments