முரட்டு சிங்கிள் முருகேசனும்..! நாடக மனைவியும்..! திருமணத்தால் தவிக்கும் சோகம்
35 வயதிற்கு மேலாகியும், திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் தவிக்கும் முரட்டு சிங்கிள் இளைஞர்களை குறிவைத்து நூதன மோசடி ஒன்று அரங்கேறி வருகின்றது.
விருந்துக்கு சென்ற இடத்தில் மாப்பிள்ளையை வீதியில் தவிக்கவிட்ட நாடக மனைவி
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த குட்டை தயிர்பாளையம் பகுதியை சேர்ந்த 37 வயது முரட்டு சிங்கிள் முருகேசன். தறிப்பட்டறையில் பணியாற்றி வரும் முருகேசனுக்கு நீண்ட நாட்களாக திருமணத்துக்கு பெண் தேடியும் பெண் கிடைக்கவில்லை
இந்த நிலையில் திருமண தரகரான கவுசி என்பவர் அறிமுகமாகி, தனக்கு தெரிந்த உறவுக்கார பெண் இருப்பதாகவும் முறைப்படி பேசி அப்பெண்ணை திருமணம் செய்து வைப்பதாகவும் கூறியுள்ளார்.
அதன்படி முருகேசனையும், உறவினர்களையும் அழைத்துக் கொண்டு திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஈஸ்வரன் கோவிலில் வைத்து தேவி என்ற 36 வயது பெண்ணை மணப்பெண் என கெளசி அறிமுகப்படுத்தினார். பெண்ணின் சித்தி கோமதி, சவுந்தரராஜா, நாகராஜன் உள்ளிட்டோரையும் கவுசி அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
இரு வீட்டாரின் முடிவுப்படி ஈரோடு அருகே உள்ள பேரோடு மாரியம்மன் கோயிலில் கடந்த ஜனவரி மாதம் 8ம் தேதி திருமணம் நடந்துள்ளது. திருமணம் முடித்த கையோடு புரோக்கர் கமிஷனாக கவுசிக்கு ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை கொடுத்துள்ளார் முருகேசனின் தாய் சம்பூணம்.
இந்த நிலையில் திருமணம் முடிந்த ஒரு வாரத்தில் மறு வீடு விருந்துக்கு செல்ல வேண்டும் என முருகேசனின் மனைவி தேவி தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து கோவையில் உள்ள தேவியின் சித்தி வீட்டுக்கு இருவரும் சென்றுள்ளனர். அங்கிருந்து பல்லடம் பகுதியில் அண்ணன் வீட்டுக்கு செல்ல வேண்டும் என கூறிய தேவி, பல்லடம் பேருந்து நிலையத்தில் புதுமாப்பிள்ளையான முருகேசனை தவிக்கவிட்டு சென்றுவிட்டதாக கூறப்படுகின்றது.
செல்போன் மூலம் கேட்ட போது 4 நாட்கள் கழித்து வீட்டுக்கு வருவதாக தேவி கூறியுள்ளார். இதனை நம்பி முருகேசன் தனது வீட்டிற்கு வந்த நிலையில் ஒரு வாரம் கடந்தும் மனைவி தேவி வீட்டுக்கு திரும்பவில்லை.
இதுகுறித்து புரோக்கர் கமிஷன் பெற்ற கவுசியிடம் கேட்டபோது, மனைவியின் உறவினர்களிடம் விசாரியுங்கள் என கூறி நழுவியுள்ளார்.
உறவினர்கள் வீடுகளுக்கு சென்று விசாரித்தால், மனைவி தேவி தொடங்கி சித்தி, அண்ணன் என நடித்த அனைவருமே திருமண புரோக்கர்கள் என்றும் கவுசியுடன் சேர்ந்து திருமணமாகாத முரட்டு சிங்கிள் இளைஞர்களை குறிவைத்து நாடக திருமணம் செய்துவைத்து கமிஷன் மோசடியில் ஈடுபட்டது அம்பலமானது.
இது குறித்து சித்தோடு காவல் நிலையத்தில் முருகேசன், புகார் அளித்துள்ள நிலையில், அவரது தாய் சம்பூர்ணம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்க துரையிடம் விரைவாக விசாரித்து நடவடிக்கை எடுக்ககோரி புகார் அளித்துள்ளார்.
Comments