தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமல்... வெறிச்சோடிய சாலைகள்!

0 21755
தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமல்... வெறிச்சோடிய சாலைகள்!

தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. விடிய விடிய போலீசார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.

தமிழக அரசு அறிவித்தபடி, இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரையிலான இரவுநேர ஊரடங்கு அமலுக்கு வந்தது. இரவு 9 மணிக்கு சென்னையில் ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், மளிகைக்கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. வணிகவளாகங்களில் உள்ள கடைகளும் மூடப்பட்டு உள்ளே இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

சென்னையில் இருந்து இரவுநேரப் பேருந்துகள் எதுவும் இயக்கப்படாததால், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏராளமானோர் காத்திருந்தனர். பேருந்து, ஆட்டோக்கள் ஓடாததால் சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

இரவு சரியாக 10 மணிக்கு முக்கிய சாலைகள் அனைத்தும் தடுப்புக் கம்பிகளால் மூடப்பட்டு, வாகன தணிக்கை முடுக்கிவிடப்பட்டது. அண்ணாசாலை, காமராஜர் சாலை, நூறடி சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஆற்காடு சாலை உள்ளிட்ட இடங்களில் ஆங்காங்கே தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன.

நகரின் முக்கிய சாலைகளில் போலீசார் தடுப்புகளை அமைத்து விடிய விடிய சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, இருசக்கர வாகனங்களில் வந்தவர்களை நிறுத்தி ஆவணங்களை சோதனையிட்டனர். உரிய காரணம் இன்றி வெளியே சுற்றும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர். வழக்கம் போல் இல்லாமல் சென்னையின் பிரதான சாலைகள் அனைத்தும் இரவு நேர ஊரடங்கால் வெறிச்சோடி காணப்பட்டன.

திருச்சி,திண்டுக்கல்,சேலம்,கரூர் உள்ளிட்ட இடங்களில் இரவு நேர முழு ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடின. இரவுநேர ஊரடங்கையொட்டி திருச்சி திருவெறும்பூரில் உள்ள அனைத்து கடைகளும் 10 மணிக்கு முன்னதாகவே அடைக்கப்பட்டன. திருச்சியிலிருந்து பிற மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் படிப்படியாக நிறுத்தப்பட்டு 9 மணி அளவில் முற்றிலுமாக நிறுத்தப்பட்டன

சேலத்தில் மருந்துக்கடைகளை தவிர அனைத்துக்கடைகளும் அடைக்கப்பட்டன.மாநகரின் முக்கிய பாலங்கள் அனைத்திலும் வாகனங்கள் செல்லாமல் இருக்க ஆங்காங்கே பேரிகார்டுகள் அமைக்கப்பட்டு இருந்தன.

கரூரில் முக்கிய சாலைகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அத்தியாவசியமின்றி வெளியில் சுற்றியவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இரவு நேர ஊரடங்கையொட்டி இரவு 9 மணிக்கே திண்டுக்கல் பேருந்துநிலையம் பயணிகளின்றி வெறிச்சோடியது.

மதுரை,நெல்லை,தூத்துக்குடியில் இரவு நேர ஊரடங்கையொட்டி கடைகள் அடைக்கப்பட்டு,பேருந்து சேவைகள் இரவில் நிறுத்தப்பட்டன.

மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் உள்ளிட்ட மதுரையின் முக்கிய பேருந்து நிலையங்களில் இரவில் பேருந்துகள் இயக்கப்படாததால், பயணிகள் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் பேருந்து நிலையத்தில் தங்கினர்‍.இளைஞர்கள் சிலர் செல்போனில் கேம் விளையாடி பொழுதை போக்கினர்‍.

நெல்லையில்,இரவு நேர ஊரடங்கை சுட்டிக்காட்டி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கடைகளை மூட அறிவுறுத்தியதையடுத்து, கடைகளை அவசர அவசரமாக வியாபாரிகள் மூடினர்‍.

தூத்துக்குடியில் 9 மணி அளவில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டதால் நகர் முழுவதும் வெறிச்சோடிக் காணப்பட்டது. தானாக முன்வந்து கடைகளை அடைத்து அரசின் நடவடிக்கைக்கை வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு அளித்தனர்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் சாலை ஆகியவை இரவு ஊரடங்கு காரணமாக வெறிச்சோடிக் காணப்பட்டன. திருப்போரூர், நாவலூர், கேளம்பாக்கம், கோவளம் உள்ளிட்ட இடங்களில் கடைகள் முன்கூட்டியே அடைக்கப்பட்டன.

அத்தியாவசியப் பொருட்களை ஏற்றி வந்த சரக்கு வாகனங்கள் மட்டுமே இயக்கப்பட்டன. பணிமுடிந்து இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் வந்தவர்களை விசாரணைக்குப் பின் போலீசார் அனுப்பிவைத்தனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் ரோந்துப் பணிகளைப் பார்வையிட்டனர். 250க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

 இரவு நேர ஊரடங்கையொட்டி மாதவரம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் 10 மணிக்கு முன்னரே கடைகள் அடைக்கப்பட்டன.கொல்கத்தா நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து மிக மிக குறைவாகவே காணப்பட்டது.

சென்னை பூந்தமல்லி, குமணன்சாவடி, நசரத்பேட்டை,போரூர், காரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையின் நடுவே தடுப்புகள் அமைத்து வாகன ஓட்டிகளிடம் போலீசார் விசாரணை நடத்தினர்‍. உரிய ஆவணங்கள் காண்பித்த பிறகே வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.

காஞ்சிபுரத்தில் 10 மணிக்கு முன்னரே மருந்து கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. பேருந்துகள் இரவு 9 மணியோடு நிறுத்தப்பட்டதால் நகர பேருந்து நிலையம் வெறிச்சோடிக் காணப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments