படிக்கிறது B.TECH... பல லட்ச ரூபாய் சுருட்டிய மாணவன்.!
தெலங்கானாவில் ஐ.ஏ.எஸ் அதிகாரி போல் நடித்த பொறியியல் மாணவர் ஒருவர், 29 பேரிடம் அரசு வேலை வாங்கித்தருவதாகக்கூறி 80 லட்ச ரூபாய் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் மஞ்சூரியாலா மாவட்டத்தைச் சேர்ந்தவர் பார்லா லக்ஷ்மி நாராயணா. இவர் அதேப்பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு பிடெக் படித்து வந்துள்ளார்.
தன்னை தானே ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறிக் கொண்டு உலா வரும் இவர், அரசு வேலைக்குத் தயாராகி வரும் மாணவர்களைச் சந்தித்து ”உங்களுக்கு அரசுப் பணி கிடைக்க நா கியாரண்டி” என லாவகமாக பேசியுள்ளார்.
மேலும் தன்னை ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் காட்டிக் கொள்ள பலவித தில்லாலங்கடி வேலைகளை செய்துள்ளார்.
தனக்கு ஒரு ஓட்டுநரையும், தனிப்பட்ட உதவியாளர் ஒருவரையும் நியமித்து, எங்குச் சென்றாலும் அவர்கள் இருவருடன் பந்தாவாக செல்லும் நாராயணா, காண்போரைத் தான் ஒரு ஐ.ஏ.எஸ் ஆபிஸர் என்று நம்பவைத்துள்ளார்.
ஒவ்வொருவரிடமும் அரசு வேலைக்கு மூன்றில் இருந்து 5 லட்ச ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்துள்ளார் நாராயணா. தான் ஒரு போலியான STRICT ஆபிசர் என்பதால், தான் நிர்ணயம் செய்த தொகையில் இருந்து ஒரு பைசாவை கூட குறைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இவ்வாறு 29 பேரிடம் அரசு வேலை வாங்கி தருகிறேன் எனக் கூறி 80 லட்ச ரூபாய் வரை லஷ்மி நாராயணா சுருட்டியதாக கூறப்படுகிறது. அந்த பணத்தின் மூலம் இரண்டு கார்கள், ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் ஒரு பங்களா வீடு என்று ராஜ வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.
இந்த நிலையில், அரசு வேலைக்காக 3 லட்ச ரூபாயைக் கொடுத்து ஏமாந்த இருவர் அளித்த புகாரின் அடிப்படையில் தற்போது நாரயணா கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினர், லஷ்மி நாரயணாவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் இன்னும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு வேலைக்கு ஆசைப்பட்டு தவறான பாதையை தேர்ந்தெடுப்பவர்களுக்கு இச்சம்பவம் ஒரு பாடமாய் அமைந்துள்ளது. படிக்கும் வயதில் மோசடியில் ஈடுப்படுவதை EXTRA CURICULAR ACTIVITIES ஆக நினைத்து பல லட்ச ரூபாய் வரை சுருட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Comments