ஊரடங்கில்., எந்தெந்த நிறுவனங்களுக்கு விலக்கு.! தமிழ்நாடு அரசு அறிவிப்பு

0 33309

மிழ்நாட்டில், இரவு நேர ஊரடங்கு நேரத்திலும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின்போதும், அத்தியாவசிய பொருள் உற்பத்தி தொழிலகங்கள் உட்பட, எந்தெந்த நிறுவனங்கள் இயங்கலாம் என்பதை பட்டியலிட்டு, தமிழக அரசு, அரசாணை வெளியிட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், உற்பத்தி நிறுவனங்கள் தொடர்ந்து இயங்கலாம் என்றும், இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மருந்து-மாத்திரை உற்பத்தி நிறுவனங்கள், துப்புரவு பொருட்கள், ஆக்ஸிஜன், மருத்துவ சாதனங்கள், மருத்துவ ஜவுளி ஆலைகள் தொடர்ந்து இயங்கலாம்.

கோழி, ஆடு உள்ளிட்ட கால்நடை வளர்ப்பு மற்றும் இறைச்சி உணவு தொடர்பான தொழிலகங்கள் பணிகளை தடையின்றி தொடரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உரங்கள் மற்றும் விவசாய இயந்திரங்கள் உற்பத்தி தொழிலகங்கள், ஏற்றுமதி பொருள் உற்பத்தி அலகுகள், பாதுகாப்பு உபகரண உற்பத்தி நிறுவனங்கள், பேக்கேஜிங் பொருட்களை உற்பத்தி செய்யும் ஆலைகள் தொடர்ந்து இயங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் செயல்முறை தொழிற்சாலைகளான, சுத்திகரிப்பு நிலையங்கள், பெரிய எஃகு ஆலைகள், பெரிய சிமெண்ட் ஆலைகள், பெயிண்டிங் உள்ளிட்ட வேதியியல் தொழிற்சாலைகள், சர்க்கரை ஆலைகள், உரங்கள், மிதவை கண்ணாடி ஆலைகள், டயர் உற்பத்தி தொழிற்சாலைகள், பெரிய காகித ஆலைகள், மொபைல் போன்கள் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருள் உற்பத்தி தொழிற்சாலைகள், ஆட்டோமொபைல் உற்பத்தி தொழிற்சாலைகள், பெரிய ஜவுளி தொழிற்சாலைகள் ஆகியவை அனைத்து நாட்களில் தொடர்ந்து இயங்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு அனுமதி அளிக்கப்பட்ட நிறுவனங்கள், போக்குவரத்து மற்றும் உணவு இடைவேளைகளின்போது, கட்டாயம் தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

தொழிலாளர்கள், அதிகாரிகள் என அனைவரும் முக கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும். சானிடைசர் உள்ளிட்ட கிருமி நாசினி பயன்பாடுகளை அதிகரித்து, தொழிலாளர்களின் சுகாதாரத்தை கண்காணிக்க வேண்டும்.

இவற்றை கடைபிடிக்க தவறும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு எச்சரித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments