வேலூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 7 பேர் உயிரிழந்த விவகாரம்.... உடனடியாக அறிக்கை அளிக்க மருத்துவக்கல்வி இயக்குனர் உத்தரவு
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில், ஆக்சிஜன் பற்றாக்குறையால் 7 பேர் உயிரிழந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்த விவகாரத்தில், அறிக்கை தாக்கல் செய்யுமாறு மருத்துவமனை நிர்வாகத்திற்கு மருத்துவக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டு மற்றும் பொது வார்டில் சிகிச்சை பெற்று வந்த 7 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். முறையான ஆக்சிஜன் சப்ளை இல்லாததால் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். இந்த குற்றச்சாட்டை மறுத்த மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், மருத்துவக் கல்லூரி இயக்கக விசாரணைக்கு பரிந்துரைக்கப்படும் என கூறியிருந்தார்.
இந்நிலையில், மருத்துவக்கல்வி இயக்குனர் நாராயண பாபு வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார். 7 பேர் உயிரிழப்புக்கான காரணம், நோயாளிகள் விவரம், கொடுக்கப்பட்ட சிகிச்சை உள்ளிட்ட முழு விவரங்களை அரசுக்கு அறிக்கையாக அளிக்க அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
Comments