இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருவதால் பகலில் இயக்கப்படும் தொலைதூர பேருந்துகள்

0 10007
பகலில் இயக்கப்படும் தொலைதூர பேருந்துகள்

இன்று முதல் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்படவிருக்கும் நிலையில், திருச்சி, மதுரை, நெல்லை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து இரவில் நீண்ட தூரம் இயக்கப்படும் பேருந்துகள், பகலில் இயக்கப்பட்டன. 

கொரோனா பரவலின் இரண்டாம் அலை பரவலால் தமிழகம் முழுவதும் இன்று இரவு முதல் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளன. இதனால் இரவு 10 மணிக்கு மேல் பேருந்து சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நெல்லை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சென்னை மற்றும் பிற மாநிலங்களுக்கு இரவில் செல்லும் பேருந்துகள் பகல்நேர பேருந்துகளாக இயக்கப்பட்டன. அதேபோல் சென்னை கோயம்பேட்டிலிருந்து தென் மாவட்டங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டன. புறப்படும் இடத்திலிருந்து இரவு 8 மணி முதல் 9.30 க்குள் சேருமிடத்தை அடையும் பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பேருந்தில் பயணிக்கும் அனைவருக்கும் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு, முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பேருந்துகள் கிருமி நாசினி மூலம் தூய்மைப்படுத்தப்பட்ட பின்னரே பயணிகள் ஏற அனுமதிக்கப்பட்டனர். நெல்லை, மதுரையில் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதாகவும், கூடுதல் பேருந்துகள் ஏதும் இயக்கப்படவில்லை என போக்குவரத்துத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இதேபோல் கோயம்பேட்டில் இருந்து நாளொன்றுக்கு 380 தொலைதூர பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில் இன்று காலை 10 மணி வரை 80 பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டதாக மாநகர போக்குவரத்துதுறை தெரிவித்துள்ளது.

இதனிடையே சென்னை கோயம்பேட்டிலிருந்து மதுரை, சேலம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள் பிற்பகல் ஒரு மணியுடன் நிறுத்தப்பட்டன. திருச்சிக்கு பிற்பகல் 2.30 வரையிலும் கும்பகோணத்துக்கு 2 மணி வரையிலும் மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments