சென்னையில் கொரோனா நோயாளிகளுக்கான படுக்கைகள் விவரம்!

0 2938
கொரோனா நோயாளிகளுக்கான படுக்கைகள் விவரம்!

சென்னையில் கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 17 ஆயிரத்து 813 படுக்கைகளில், 5ஆயிரத்து 210 படுக்கைகள் நிரம்பியுள்ளன என்றும் 12ஆயிரத்து 603 படுக்கைகள் காலியாக உள்ளன என்றும் தமிழக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் 5 அரசு மருத்துவமனைகள் 11 சிறிய மருத்துவமனைகள், 14 பராமரிப்பு மையங்கள் என 30 மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளுக்காக செயல்படுகின்றன என்று தமிழக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை ராஜீவ் காந்தி அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு என ஆயிரத்து 618 படுக்கைகள் உள்ள நிலையில், அவற்றில் ஆயிரத்து 79 படுக்கைகள் நிரம்பி, 539 படுக்கைகள் காலியாக உள்ளன. இதேபோல் ஆயிரத்து 200 படுக்கைகள் கொண்ட அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் 655 படுக்கைகளும் கே எம் சி. மருத்துவமனையில் 138 படுக்கைகளும் அரசு ஓமந்தூரார் மருத்துவமனையில் 63 படுக்கைகளும் கிண்டி அரசு மருத்துவமனையில் 40 படுக்கைகளும் காலியாக உள்ளதாக கோவிட் கட்டுப்பாட்டு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை தவிர தீவிர சிகிச்சை தேவைப்படாத, ஆனால் மருத்துவமனையில் இருக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கு என சென்னையில் பதினோரு சிறிய மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கேகே நகர், தண்டையார்பேட்டை, அண்ணாநகர், எழும்பூர், ராயபுரம், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் இந்த மருத்துவமனைகள் உள்ளன. மொத்தமாக ஆயிரத்து 800 படுக்கைகள் கொண்ட இந்த 11 மருத்துவமனைகளில் 795 படுக்கைகள் நிரம்பியுள்ளன என்றும் ஆயிரத்து ஐந்து படுக்கைகள் காலியாக உள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.

கல்லூரி வளாகங்கள் பல கொரோனா பராமரிப்பு மையங்களாக மாற்றப்பட்டுள்ள நிலையில், அவற்றில் அறிகுறிகள் இல்லாத அல்லது லேசான அறிகுறிகளுடன் இருக்கும் இளம் வயதினர் அனுமதிக்கப்படுவர் என்று கூறப்படுகிறது.

ஜெருசலம் பொறியியல் கல்லூரி, சென்னை ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம், பாரதி மகளிர் கல்லூரி, சென் ஜோசப் கல்லூரி, குருநானக் கல்லூரி, வேலம்மாள் பொறியியல் கல்லூரி, சென்னை பல்கலைக்கழக மாணவர் விடுதி, விக்டோரியா மாணவர் விடுதி, உள்ளிட்ட 14 பராமரிப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு அதில் 11 ஆயிரத்து 645 படுக்கைகள் உள்ளன. இந்த மையங்களில் 1482 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 10 ஆயிரத்து 163 படுக்கைகள் காலியாக உள்ளன என்றும் கோவிட் கட்டுப்பாட்டை மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை தவிர தமிழ்நாடு முழுவதும் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படுக்கைகள் உள்ளன என்றும் அதில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கக்கூடிய 36 மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் மட்டும் 25 ஆயிரத்து 987 ஆக்சிஜன் படுக்கைகள் உள்ளன என்றும் கூறப்படுகிறது. சென்னையில் மட்டும் 10 ஆயிரத்து 568 ஆக்சிஜன் படுக்கைகள் உள்ளன என்றும் அவற்றில் 1897 ஆக்சிஜன் படுக்கைகள் காலியாக உள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments