தர்மபுரி தடாகத்தில் பொது வெளியில் மருத்துவ கழிவுகள்..! கொரோனா பரவாதா ஆபீசர்ஸ் ?

0 3198
தர்மபுரி தடாகத்தில் பொது வெளியில் மருத்துவ கழிவுகள்..! கொரோனா பரவாதா ஆபீசர்ஸ் ?

கொரோனா பரவுதலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் தர்மபுரி அருகே தண்ணீர் வற்றிப்போன தடாகம் ஒன்றில் தனியார் மருத்துவமனையின் கழிவுகள் கொட்டப்படும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நோய்த்தொற்று பரவலைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது .

தர்மபுரி மாவட்டத்தில், பல்வேறு பகுதிகளில், திறந்த வெளியில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகளால் நோய் பாதிப்பு அதிகரிக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது. தர்மபுரியை அடுத்துள்ள, முத்தம்பட்டி வனப்பகுதி, நல்லம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில், வனப்பகுதி, நீர் ஓடை பகுதி, ஏரிகள் என அனைத்து இடங்களிலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன.

இந்த மருத்துவக்கழிவுகள் தனியார் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்திய ஊசிகளாக இருக்கலாம் என பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. இது போன்று பொது இடங்களில் மருத்துவகழிகள் கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.

நல்லபள்ளி அடுத்த தண்டுகாரம்பட்டி பகுதியில் உள்ள நீர் ஓடை பகுதியில் மூட்டை மூட்டையாக மருத்துவக் கழிவுகள் மீண்டும் கொட்டப்பட்டு உள்ளன. அதில் நோயாளிகளுக்கு பயன்படுத்தப்பட்ட ஊசிகள், சிரஞ்சிகள் மருந்து பாட்டில்கள், ரத்த கரை படிந்த பஞ்சுகள், ரத்த மாதிரிகளை எடுத்த ஊசிகள், குளுக்கோஸ் பாட்டில்கள் என அனைத்தையும் அப்படியே கொண்டுவந்து கொட்டிச் சென்றுள்ளனர்.

இந்த நீர் ஓடை பகுதியில் அருகிலேயே மாடுகள் நீர் அருந்தும் குளமும் உள்ளது. மருத்துவ கழிவுகளை இரவு நேரங்களில் ஒரு சில தனியார் மருத்துவமனை ஊழியர்கள் கொண்டு வந்து போட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

தற்போது இரு தினங்களாக தண்டுகாரம்பட்டி பகுதியில் மழை பெய்து வருவதால் பயன்படுத்தப்பட்ட ஊசிகள் மருந்துகள் சிரஞ்சிகள் மருந்து பாட்டிலில் உள்ள எஞ்சிய மருந்துகள் மழை நீரில் கலந்து மாடுகள் நீர் அருந்தும் குட்டையில் தேங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மருத்துவ கழிவுகளை பொது வெளியில் கொட்டப்படுவதால் கால்நடைகள் மற்றும் மனிதர்களுக்கு அதிக அளவு நோய் பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது. இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதே நேரத்தில் முககவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்கும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் இது போன்ற மருத்துவ கழிவுகளை கொட்டுபவர்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே சாமானியனின் எதிர்பார்ப்பாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments