எம்புள்ள படிக்க வேண்டாமா ? ஒரு கிராமப்புற தாயின் ஆதங்கம்
தமிழகத்தில் கொரோனாவால் அறிவிக்கப்பட்ட விடுமுறையால் பெரும்பான்மையான கிராமப்புற அரசு ஆரம்பப் பள்ளி மாணவர்கள், ஒரு வருடமாக எந்த ஒரு பாடமும் கற்றுக் கொள்ள இயலாமல் போய் விட்டதாக கிராமப்புறத் தாய்மார்கள் ஆசிரியரிடம் ஆதங்கப்படும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிறது.
தமிழகத்தில் கொரோனாவை காரணம் காட்டி ஆரம்பப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து ஒரு வருடத்தை தாண்டியுள்ள நிலையில், சம்பிரதாயத்துக்கு பள்ளிக்கூடத்துக்கு வந்து பாட புத்தகங்களை மட்டும் வழங்கி விட்டு செல்லும் அரசுப் பள்ளி ஆசிரியர்களிடம் புத்தகங்களை வாங்க மறுத்து கிராமப்புறத்தாய் ஒருவர் ஒருவர் எழுப்பிய உரிமைக்குரல் ஒட்டு மொத்த தாய்மார்களின் ஆதங்கமாய் பார்க்கப்படுகின்றது.
யாருமே வராத எங்க ஊருக்கு எப்படி கொரோனா வரும் என்றும் படிக்காத தங்களுக்கு எப்படி சொல்லிக் கொடுக்க முடியும் என்றும் உச்சியில் உரைப்பது போல கேட்ட அந்த கிராமப்புற ஏழைத்தாயிடம், அரசு உத்தரவை சொல்லி ஆசிரியை மீண்டும் புத்தகத்தை நீட்ட , கோவில் தொறக்கலையா ?, பஸ் விடவில்லையா ? ஒரு டீச்சர் வந்து கிராமத்தில பாடம் நடத்துனா கொரோனா வந்துருமா ? என்று அந்த பெண் கேட்ட கேள்வி ஒவ்வொன்றும் சுளீர் ரகம்,
மாணவர்களுக்கு கொடுக்கப்படும் புத்தகங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் இருப்பதாலும், தங்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்பதாலும் அதனை வாங்கிச்செல்ல முடியாது என்று மறுத்தனர்.
மாதச்சம்பளத்தை தவறாமல் பெறும் அந்த ஆசிரியையோ வாரத்துக்கு இருமுறை பள்ளிக்கூடத்துக்கு வந்து செல்வதாக தெரிவிக்க, அப்பவாவது சொல்லிக் கொடுக்கலாமே என்ற அந்த பெண்ணின் குரலில் ஏக்கம் தெரிந்தது. அத்தோடு தங்கள் ஊர் தனியாக இருப்பதால் கொரோனா எப்படி வரும் ? என்றும் பள்ளிக்கூடம் திறக்கும்வரை யாரும் அந்த ஆங்கிலப் புத்தகங்களை வாங்கப்போவதில்லை என்று கூறி புறக்கணித்தனர்.
ஆரம்பக் கல்வி மாணவர்களுக்கு கூட ஆன்லைன் கல்வி சொல்லிக் கொடுப்பதாக வீம்புக்கு மார்தட்டினாலும் இந்த கிராமப்புறத்தாயின் ஆதங்கம் தான் ஒட்டு மொத்த தமிழக தாய்மார்களின் உள்ளக் குமுறலாக உள்ளது.
Comments