போலி என்.ஐ.ஏ அதிகாரி போலிசில் சிக்கிய கதை..! திருமணத்துக்காக போட்ட நாடகம்

0 4106
போலி என்.ஐ.ஏ அதிகாரி போலிசில் சிக்கிய கதை..! திருமணத்துக்காக போட்ட நாடகம்

நெல்லையில் தன்னை தேசிய புலனாய்வு முகமை டி.எஸ்.பி என்று கூறிக்கொண்டு போலி அடையாள அட்டையுடன் சுற்றித் திரிந்த பொறியியல் பட்டதாரி கைது செய்யப்பட்டுள்ளார். திருமணம் செய்வதற்காகவும் உறவினர்கள் மத்தியில் கௌரவமாக வலம் வரவும் இளைஞர் கையிலெடுத்த ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகிப் போன கதையை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...

நெல்லை பாளையங்கோட்டை முருகன்குறிச்சி சாலையில் ஞாயிற்றுக்கிழமையன்று போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒருவழிப் பாதையில் வந்த வோல்க்ஸ்வேகன் கார் ஒன்றை மடக்கிய போலீசார், காரில் வந்த நபரிடம் ஆவணங்களை கேட்டுள்ளனர். மத்திய உள்துறை அமைச்சகம் என்று எழுதப்பட்டிருந்த அந்த காரில் வந்த நபர், தாம் தேசிய புலனாய்வு முகமை டி.எஸ்.பி என்றும் எனது காரையே மடக்குகிறீர்களா என்றும் கூறி போலீசிடம் எகிறியுள்ளார்.

அவரின் தோற்றம், நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர். அதில் அவர் பெயர் மெல்வின் ஜெயக்குமார் என்பதும் குருந்துடையார்புரம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. பொறியியல் பட்டப்படிப்பு முடித்த மெல்வின் ஜெயக்குமார் டெல்லி சென்று எம்.ஏ கிரிமினாலஜி படித்துள்ளார்.

படிப்பு முடித்து அங்கேயே வேலை தேடியவருக்கு கொரோனா ஊரடங்கால் வேலை எதுவும் கிடைக்கவில்லை. இதனையடுத்து சொந்த ஊர் வந்தவருக்கு திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர். ஆனால் வேலை எதுவும் இல்லாதவருக்கு எப்படி பெண் கொடுப்பது என உறவினர்கள் கேள்வி எழுப்பியதாகக் கூறப்படுகிறது. இதனை அவமானமாகக் கருதிய மெல்வின் ஜெயக்குமார், சில காலம் கழித்து தனக்கு தேசிய புலனாய்வு முகமையில் டி.எஸ்.பி வேலை கிடைத்துள்ளதாகக் கூறியுள்ளார்.

முன்னதாக அதற்குண்டான போலி அடையாள அட்டை, போலி முத்திரையுடன் கூடிய ஆவணங்கள் ஆகியவற்றை தயார் செய்த அவர், தனது காரில் மத்திய உள்துறை அமைச்சகம் என பந்தாவாக ஸ்டிக்கரும் ஒட்டியுள்ளார் என்கின்றனர் போலீசார். அதன் பின்னர் கடந்த ஜனவரியில் அவருக்குத் திருமணமும் முடிந்துள்ளது.

மெல்வின் ஜெயக்குமாரிடமிருந்து போலி அடையாள அட்டை, போலி அரசு முத்திரை, லேப்டாப் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த போலீசார், அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். 

திருமணமாகி 4 மாதங்களே ஆகும் நிலையில் மெல்வின் ஜெயக்குமாரின் இந்த பித்தலாட்டம் தெரியவந்து பெண் வீட்டார் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments