தமிழகத்தில் அடுத்து இரு நாட்களில் 22 மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்..! பகல் நேர வெப்பநிலை 5 டிகிரி பாரன்ஹீட் வரை உயருமென வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் அடுத்து இரு நாட்களில் 22 மாவட்டங்களில் பகல் நேர வெப்பநிலை அதிகரிக்குமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில்,சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல் உள்ளிட்ட 22 மாவட்டங்களில் 20, 21 ஆம் தேதிகளில் பகல் நேர வெப்பநிலை இயல்பை விட 5 டிகிரி பாரன்ஹீட் வரை அதிகரிக்க கூடுமென கூறப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் காற்றில் ஒப்பு ஈரப்பதம் 50 முதல் 80 விழுக்காடு வரை இருக்க கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் பிற்பகல் முதல் அடுத்த நாள் காலை வரை வெக்கையாகவும், இயல்புக்கு மாறாக அதிகமாக வியர்க்கும் என்று கூறப்பட்டுள்ளது.
தேவைக்கு ஏற்ப குடிநீர், இளநீர், மோர் மற்றும் நீர்சத்து மிகுந்த காய்கறிகள், பழவகைகளை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், வெள்ளை மற்றும் வெளிறிய வண்ண கதர் ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Comments