தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு

0 10189
தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு

தமிழ்நாட்டில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.

இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை, ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் ஞாயிற்றுக்கிழமை, முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழகஅரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நாளை முதல் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரையிலான ஊரடங்கின்போது, தனியார் மற்றும் பொது பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி கிடையாது. ஆட்டோ, டாக்சி மற்றும் தனியார் வாகனங்கள் உள்ளிட்டவை அனுமதிக்கப்படாது

வெளிமாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்குளும், மாவட்டங்களுக்கு இடையேயான பொதுப் போக்குவரத்தும் அனுமதிக்கப்படாது என விளக்கம் அளித்துள்ளது.

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக மாநிலஅரசு அறிவித்துள்ளது. அதேநேரம், 12ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான செய்முறை தேர்வு திட்டமிட்டபடி தொடர்ந்து நடைபெறும்.

ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். இதனால், கடற்கரை உள்ளிட்ட அனைத்துவகை சுற்றுலா தலங்களுக்கும் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. அனைத்துவகை சுற்றுலா தலங்களுக்கும் அனைத்து நாட்களிலும் தடை அமலில் இருக்கும்.

உணவகங்களில் காலை, நண்பகல், மாலை நேரங்களில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும்.

தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் பெட்ரோல், டீசல் பங்குகள் செயல்பட அனுமதிக்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

தியேட்டர்களில் 50 விழுக்காட்டுக்கு மேல் ரசிகர்கள் அனுமதித்தாலோ, முகக்கவசம் அணியாமல் படம் பார்க்க அனுமதிக்கப்பட்டாலோ, தியேட்டர் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

டீக்கடைகள், ஹோட்டல்கள், மளிகை கடைகள், காய்கறி கடைகள் 50% வாடிக்கையாளர்களுடன் இரவு 9 மணி வரை மட்டுமே இயங்க அனுமதிக்கப்படும்

ஷாப்பிங் மால்கள், ஜவுளிக் கடைகள் உள்ளிட்டவை 50% வாடிக்கையாளர்களுடன் இரவு 9 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்படுவதாக அரசு கூறியுள்ளது.

அரசு மற்றும் தனியார் கல்லூரி, பல்கலைக்கழக தேர்வுகள் ஆன்லைனில் மட்டுமே நடத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது

இரவு நேர ஊரடங்கு அமலானாலும் அத்தியாவசிய பொருட்கள் உற்பத்தி, மற்றும் விநியோகத்தில் தொடர்ந்து ஈடுபட தடையில்லை.

ஞாயிற்றுக்கிழமைகளில் அமலாகும் முழு ஊரடங்கின்போது இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட், காய்கறி கடைகள் - மளிகை கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் இயங்காது.

முழு ஊரடங்கின்போது, தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள் உட்பட செயல்பட அனுமதிக்கப்படாது எனவும் அரசு அறிவித்துள்ளது

அதே நேரம், பால் விநியோகம், மருந்து கடைகள், மருத்துவமனை உள்ளிட்ட மிக அத்தியாவசிய தேவைகள் அனுமதிக்கப்படும்.

ஏற்கனவே அனுமதி வாங்கியுள்ள கோவில் குடமுழுக்கு விழாக்களில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்றும், புதிதாக கோவில் குடமுழுக்குகளை ஒத்திவைக்குமாறும் தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

தனியார் மருத்துவமனைகள், தங்கும் விடுதிகளுடன் இணைந்து புதிய கொரோனா பாதுகாப்பு மையங்களை ஏற்படுத்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

திருமண நிகழ்வுகளில் 100 நபர்களுக்கு மிகாமலும், துக்க நிகழ்வுகளில் 50 நபர்களுக்கு மிகாமலும் பங்கேற்க ஏற்கனவே வழங்கப்பட்ட அனுமதி தொடர்ந்து நீடிக்கும்.

பொது இடங்களுக்கு வரும்போது முகக் கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் என்றும், இல்லையேல், அபராதம் விதிக்கப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது.

பொது இடங்களில் தனிநபர் இடைவெளியை (Social Distancing) கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும், தனிநபர் இடைவெளியை கடைபிடிக்காத கடைகள், வணிக நிறுவனங்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது.

தமிழ்நாட்டிலேயே ஆக்சிஜன் உற்பத்தியை ஊக்குவிக்க உடனடியாக அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அரசு அறிவித்துள்ளது.

நாளை முதல் நண்பகல் 12 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே மதுக்கடைகள், பார்கள் செயல்பட அனுமதி அளிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் மதுக்கடைகள் இயங்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments