மரக்கன்றுகளில் வாழும் சின்னக்கலைவாணர்..!
சின்னக் கலைவாணர் நடிகர் விவேக்கின் மறைவை அடுத்து அவரது நினைவாக தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
சேலம்: நடிகர் விவேக் மரணம் அடைந்ததை ஒட்டி சேலம் மாநகராட்சி பகுதியில் சேவகன் அறக்கட்டளை சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மரக்கன்றுகள் நடப்பட்டன.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மறைந்த நடிகர் விவேக்கின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது மட்டுமின்றி, மரக்கன்றுகளும் நடப்பட்டன.
நாகை: நகைச்சுவை நடிகர் விவேக் மறைவையொட்டி நாகையில் கல்லூரி மாணவர்கள் ஆசிரியர்கள் மரக்கன்றுகள் வைத்து நினைவஞ்சலி செலுத்தினர்.
புதுக்கோட்டை: நடிகர் விவேக்கின் மறைவையொட்டி புதுக்கோட்டையில் மரம் வளர்ப்போர் கூட்டமைப்பு சார்பில் அவரது படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தியும் அடுத்த ஓராண்டிற்குள் மாவட்டத்தில் 10 லட்சம் மரங்களை உருவாக்குவது என்ற உறுதிமொழியும் எடுத்துக்கொண்டனர்.
விழுப்புரம் மாவட்டத்துக்கு உள்பட்ட திருவெண்ணெய்நல்லூர் அருகேயுள்ள காந்தலவாடி மற்றும் கருவேப்பிலைபாளையம் ஆகியக் கிராமங்களில், பசுமை கிராமம் குழு சார்பில் மரக்கன்றுகள் நட்டு, விவேக்கிற்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த உள்ளி பகுதியிலுள்ள பாலாற்றங்கரையில் மறைந்த நடிகர் விவேக்கிற்கு மௌன அஞ்சலி செலுத்திய பின் 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.
அதுபோல சிதம்பரம், திருப்பரங்குன்றம், கமுதி, மயிலாடுதுறை உள்ளிட்ட இடங்களிலும் விவேக் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மரக்கன்றுகள் நடப்பட்டன.
Comments