விவேக் மரணத்துக்கு இது தான் காரணம்..! மருத்துவர் கூறும் உண்மைகள்

0 97156
விவேக் மரணத்துக்கு இது தான் காரணம்..! மருத்துவர் கூறும் உண்மைகள்

நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதால் இறந்து போனதாக தகவல் பரவி வரும் நிலையில் அவரது மரணம் நிகழ்வதற்கான 3 காரணிகள் குறித்து மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

நடிகர் விவேக்கிற்கு தடுப்பூசி போட்டுக் கொள்ள சொன்னது யார்? என்று மன்சூரலிகான் எழுப்பிய கேள்விகள் சமூக வலைதளத்தில் விவாதப்பொருளாக மாறி உள்ளது.

சுகாதாரத்துறை இயக்குனர் ராதாகிருஷ்ணன், தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கும் விவேக்கின் மரணத்திற்கும் தொடர்பில்லை என்று மறுத்து வருகின்றார். இந்த நிலையில் தினமும் சைக்கிளிங், யோகா மூச்சு பயிற்சி, நீச்சல், நடைபயிற்சி 3 மாதங்களுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்து கொண்டு உடலை கவனமாக பார்த்துக் கொண்ட நடிகர் விவேக்கிற்கு இதயத்திற்கு செல்லும் ரத்த குழாயில் திடீரென்று 100 சதவீத அடைப்பு ஏற்பட்டது எப்படி ? என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பலரது இந்த சந்தேகம் மற்றும் குழப்பங்களுக்கு மூல காரணம் , சினிமா மக்கள் தொடர்பாளர் நிகில் மற்றும் ஆரம்பத்தில் மருத்துவர்கள் அளித்த முரண்பட்ட தகவல் தான் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விவேக்கின் உடல் நிலை குறித்து அதிகார பூர்வ தகவலை வெளியிட்ட நிகில் முருகன், விவேக்கிற்கு மயக்கம் ஏற்பட்டு அவரது மகள் மருத்துவமனை அழைத்துச் சென்றதாகவும், எம்.ஆர் ஐ ஸ்கேன் எடுக்கப்படுவதாகவும், விவேக் சுய நினைவுடன் நலமாக இருப்பதாகவும் கூறி இருந்தார்

இந்த நிலையில் விவேக் காலை 11 மணிக்கு சுய நினைவின்றி சிகிச்சைக்கு கொண்டு வரப்பட்டதாகவும் அவருக்கு 100 சதவீத மாரடைப்பு ஏற்பட்டதால், ஆஞ்சியோ பிளாஸ்ட் செய்யப்பட்டு, அடைப்பு நீக்கப்பட்டதாகவும், இதயதுடிப்பு சீராக இருக்க வேண்டும் என்பதற்காக எக்மோ சிகிச்சை மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாகவும் மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இரவில் செய்தியாளரை சந்தித்த மருத்துவர்கள் விவேக்கின் உடல் நிலை மோசமாக இருப்பதால் 24 மணி நேரம் கழித்து தான் எதையும் கூற முடியும் என்று தெரிவித்தனர்.

ஆனால் அடுத்த 10 மணி நேரத்திற்குள்ளாகவே அதிகாலையில் விவேக் உயிரிழந்து விட்டதாக அறிவித்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளனர்.

சுகாதாரத்துறை இயக்குனர் ராதாகிருஷ்ணன் கூறுவது போல தடுப்பூசிக்கும் விவேக்கின் மரணத்திற்கும் தொடர்பில்லை என்று உறுதியாக கூற மறுக்கும் மருத்துவர்கள், விவேக்கிற்கு ஏற்பட்டுள்ள மாரடைப்பை சைலண்ட் ஹார்ட் அட்டாக் என்று குறிப்பிடுகின்றனர்.

அதாவது முதல் 3 நிலைகளை கடந்த அதிதீவிர நிலையாக கருதப்படும் இத்தகைய மாரடைப்பு ஒருவருக்கு ஏற்பட்டால் எந்த ஒரு வலியையும் கொடுக்காமல் சட்டென்று இருதயத்துக்கு செல்லும் ரத்தத்தை உறைய வைத்து கிட்னி, மூளை என அடுத்தடுத்த பாகங்களையும் செயல் இழக்க வைத்து கோமா நிலைக்கு கொண்டு சென்று விபரீத உயிரிழப்பை ஏற்படுத்தி விடும் என்கின்றனர். இது போன்ற சைலண்ட் மாரடைப்பு மரணங்கள் தூக்கத்திலேயே பலருக்கு நிகழ்ந்துள்ளதாகவும் விவேக் விஐபி என்பதால் வெளி உலகிற்கு தெரிகிறது என்கின்றனர்.

இந்த வகையான மாரடைப்பு ஏற்பட்டால் அதிக பட்சம் ஒரு மணி நேரத்திற்குள் அவரை மீட்டுக் கொண்டுவர என்னென்ன முதல் உதவிகள் செய்ய வேண்டுமோ ? அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டும் விவேக் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களையும், சர்க்கரை நோயாளிகளையும் சைலண்ட் மாரடைப்பு எளிதில் தாக்கும் என்று மருத்துவர்களால் சுட்டிக்கட்டப்படும் நிலையில் ஆரோக்கியமாகவும் , உடலை பேணுவதில் கவனமாகவும் இருந்த விவேக்கிற்கு இந்த மாரடைப்பு ஏற்பட என்ன காரணம் ? என்பதே இங்கே பலர் விடை தேட முயற்சிக்கும் கேள்வியாக உள்ளது..!

தேர்தல் காலம் தொட்டே கொரோனா பிரச்சனையை கையாள்வதில் சுகாதாரத்துறையினர் கோட்டைவிட்டதால் நாள்தோறும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் எகிறிக் கொண்டே செல்கிறது. இந்த நிலையில் கொரோனா தடுப்பு ஊசி போட்டுக் கொண்ட மறு நாளே விவேக் உயிரிழந்திருப்பதால், தடுப்பூசிக்கு எதிராக பரவி வரும் அச்சத்தால் சுகாதாரத்துறையினர் விழிபிதுங்கி போயுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments