தந்தை சொல்லே மந்திரம்... தந்தை போலவே மரணம்... நடிகர் விவேக்கின் கலங்க வைக்கும் முடிவு..!

0 104924
தந்தை சொல்லே மந்திரம்... தந்தை போலவே மரணம்... நடிகர் விவேக்கின் கலங்க வைக்கும் முடிவு..!

விவேக்கின் குடும்பத்தில் 6 ஆண்டுகளுக்குள் நடந்த மூன்று இறப்புகளால் விவேக்கின் மனைவி அருள்செல்வி கலங்கி நிற்கிறார். அவருக்கு ஆறுதல் கூறி தேற்ற முடியாத நிலையில் உறவினர்களும் நண்பர்களும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.

நடிகர் விவேக் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள இழுப்பை ஊரணி கிராமத்தை சேர்ச்ந்தவர். நடிகர் விவேக் எழுத்தாளர் கி.ரா உள்ளிட்ட பிரசித்தி பெற்ற எழுத்தாளர்கள் பிறந்த மண்ணை சேர்ந்த விவேக்கும் தன் படங்களில் காமெடி வாயிலாக நல்ல கருத்துகளை விதைத்து வந்தார். குறிப்பாக, மூட நம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துகளை தன் காமெடி வாயிலாக விவேக் பரப்பி வந்தார். நடிகர் விவேக் மட்டுமல்ல அவரின் தந்தை சிவ அங்கய்யா பாண்டியனும் சமூக நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர். விருகம்பாக்கத்திலுள்ள மகன் விவேக்குடன் வசித்து வந்த சிவ அங்கய்யா பாண்டியனும் தன் வாழ்நாளின் இறுதி வரை சமூகப்பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

குறிப்பாக, இலங்கைத் தமிழர்கள் மீது சிவ அங்கய்யா பாண்டியனுக்கு மிகுந்த அன்பு உண்டு. ராமநாதபுரத்திலுள்ள பள்ளியில் சிவ அங்கய்யா பாண்டியன் ஆசிரியராக பணியாற்றிய போது, மண்டபத்தில்லுள்ள அகதிகள் முகாமுக்கு சென்று தமிழ் குழந்தைகளுக்கு பாடம் எடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.

ஓய்வுக்கு பிறகு, சென்னையில் மகன் விவேக்குடன் வசித்த கடந்த 2014 ஆம் ஆண்டு சிவ அங்கய்யா பாண்டியன் 80வது வயதில் இறந்தார். உறக்கத்தின் போதே அவரின் உயிர் பிரிந்து விட்டது. படங்களில் தந்தைகளுக்கு தொந்தரவு தரும் மகனாக நடித்த விவேக்குக்கு நிஜ வாழ்க்கையில் தந்தையின் சொல்லே மந்திரம். நடிகர் விவேக் சமூக நலனில் அக்கறை கொண்டு செயல்பட முக்கிய காரணமாக இருந்தது அவரின் தந்தையே. தந்தை மரணத்தால் சோகத்தில் இருந்த விவேக்கின் குடும்பத்தில் மற்றோரு துயரச் சம்பவம் நிகழ்ந்தது.

கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் விவேக்கின் மகன் பிரசன்னகுமார் மூளைக்காய்ச்சலுக்கு பலியானார். 13 வயது பிரசன்னகுமாரின் மரணம் விவேக் என்ற தந்தையை நிலைகுலைய செய்து விட்டது.

இதனால், மகன் இறந்த துக்கத்தில் இருந்து அவரால் மீள முடியவில்லை. வெளியே சிரித்து கொண்டிருந்தாலும் உள்ளே மன உளைச்சலில்தான் இருந்து கொண்டிருந்துள்ளார். இந்த நிலையில்தான், திடீரென்று மயங்கி விழுந்து சுயநினைவை இழந்தவர் தன் தந்தை போலவே மீண்டும் நினைவுக்கு வராமலேயே மரணித்தும் விட்டார். 6 ஆண்டுகளில் வீட்டில் நடந்த மூன்று இறப்புகளால் விவேக்கின் மனைவி அருள் செல்வி மகள்கள் அமிர்தா நந்தினி, தேஜஸ்வினி ஆகியோர் கலங்கி நிற்கின்றனர்.

உறவினர்கள், நண்பர்கள் என்ன கூறி ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர். உலகில் பல நகைச்சுவை நடிகர்களின் வாழ்க்கையும் துயரம் நிறைந்ததாக இருக்கும் என்று சொல்வார்கள். அதற்கு , நடிகர் விவேக்கும் விதிவிலக்கல்ல என்று காலம் மீண்டும் ஒரு முறை உணர்த்தி விட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments