அப்துல்கலாமின் அக்கினிச்சிறகு விவேக்..! ரசிகர்கள் கண்ணீர்

0 4093
அப்துல்கலாமின் அக்கினிச்சிறகு விவேக்..! ரசிகர்கள் கண்ணீர்

விவேகம் மிக்க கருத்துக்களை காமெடியாக மக்கள் மனதில் விதைத்த வித்தகரும், மரங்களை நட்டு கலாமின் கனவுக்கு உருவம் கொடுத்த  சமூக ஆர்வலருமான நடிகர் விவேக் மாரடைப்பால் உயிரிழந்தார். லட்சோப லட்சம் ரசிகர்களின்  பிரார்த்தனை பலிக்காமல் போன சோகம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு 

தமிழகத்தின் முத்து நகரான தூத்துக்குடி மாவட்டம் கோவில் பட்டியில் பிறந்து... கோட்டை இருக்கும் சென்னைக்கு வந்து... 1987ல் திரையுலகில் அடியெடுத்து வைத்து... நகைச்சுவை சக்கரவர்த்தியாக வெற்றிக்கொடி நாட்டியவர் சின்ன கலைவானர் விவேக்..!

வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுபோகும் என்று நகைச்சுவையுடன் சமூகத்திற்கு தேவையான உன்னத கருத்துக்களால் சிரிப்பு மருந்தூட்டிய நகைச்சுவை மருத்துவர் விவேக்

மூட நம்பிக்கைகளை ஒழித்து தன்னம்பிக்கை மிக்க சமுதாயத்தை கட்டமைக்க தனது காமெடியை கருவியாக்கிய பகுத்தறிவு கருத்துக்களை விதைத்த வித்தகன் விவேக்

சென்னை மவுண்ரோட்டின் மழைகால நிலையை ஒற்றை வசனத்தால் சுட்டிக்காட்டி அதிகாரிகளை திரும்பி பார்க்க வைத்த துணிச்சல் மிக்க திரைக்கலைஞர் விவேக்

அரசு எந்திரத்தின் குறைபாடுகளையும் காமெடியால் சிறப்பாக விமர்சிக்க முடியும் என்பதை பாளையத்தம்மான் வசனத்தால் விளாசியவர் விவேக்

தமிழ் என்ற பெயரால் இளைய தலைமுறையை மூளை சலவை செய்யும் மோசடி அரசியல்வாதிகளை அடையாளம் கட்டிய அசல் தமிழ் போராளி விவேக்

சமூகத்தில் உள்ள ஏற்ற தாழ்வுகளை சாதி அடையாளங்களை காட்டமல் கருத்துக்களால் கிழித்து தொங்கவிட்ட திரையுலக பாரதி விவேக்..!

அப்துல்கலாமின் அக்கினிச்சிறகாய் ஊர் ஊராய் சென்று மரக்கன்று நட்டு வைத்து மக்களின் இதயங்களை தொட்ட ஜனங்களின் கலைஞன் விவேக்கிற்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு அவரது உயிரை நம்மிடம் இருந்து பிரித்துச்சென்றுள்ளது.

மாடர்ன் தமிழ் திரை நகைச்சுவையின் சுவாசமாக திகழ்ந்த விவேக் என்ற அந்த உன்னத கலைஞனுக்கு வடபழனி சிம்ஸ் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்ட போது அவர் மீண்டுவர வேண்டி லட்சோப லட்சம் ரசிகர்கள் செய்த பிரார்த்தனை அத்தனையும் பலிக்காமல் போனது தான் தீராத சோகம்..!

உடலால் அவர் மறைந்தாலும், திரையுலகில் அவர் விட்டுச் சென்ற கருத்தாழம் மிக்க நகைச்சுவையாலும், பூமியில் அவர் நட்டுச் சென்ற மரங்கள் தரும் நிழலாகவும், மனதுக்கு இதமான தென்றலாகவும் ஜனங்களின் கலைஞன் விவேக் நிரந்தரமாக நம்மோடு இருப்பார்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments