வெள்ளை மனம் கொண்ட விவேக கலைஞன் : நகைச்சுவையில் ஒரு சகாப்தம்

0 3718

கைச்சுவையுடன், சமூக அக்கறையும் சரிவிகிதத்தில் கலந்து, 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழர்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த வெள்ளை மனம் கொண்ட விவேக கலைஞன் குறித்த ஒரு செய்தித் தொகுப்பு..

திரைத்துறையில் அழுத்தமான தடம் பதித்ததோடு, தமிழர்களின் உரையாடலில் நீங்கா இடம்பெற்ற நகைச்சுவை நடிகர்களை விரல்விட்டு எண்ணி விடலாம். அந்த வரிசையில் நடிகர் விவேக்கிற்கு தவிர்க்க இயலாத இடம் உண்டு.

தூத்துக்குடி மாவட்டம் இலுப்பை ஊரணியை சேர்ந்த விவேகானந்தன், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் எம்.காம் படித்துவிட்டு, டிஎன்பிஎஸ்சி மூலம் நிதித்துறையில் இளநிலை உதவியாளராகி, தலைமைச் செயலகத்தில் பணியாற்றியவர். மெட்ராஸ் ஹியூமர் கிளப்பில், ஸ்டாண்ட்-அப் காமெடி மூலம் சிரிக்க வைத்துக் கொண்டிருந்த விவேக், இயக்குநர் கே.பாலசந்தர் அறிமுகத்தின் மூலம் 1987ஆம் ஆண்டில் மனதில் உறுதி வேண்டும் படத்தில் துணை நடிகராக தோன்றினார்.

புதுப்புது அர்த்தங்கள் படத்தில், இன்னைக்கு செத்தா நாளைக்கு பால் என்ற திரைப்பட வசனம் அவரை பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்த்தது.

தமிழ் திரையுலகில் எத்தனையோ நகைச்சுவை நடிகர்கள் அறிமுகமான போதிலும், தங்களுக்கென தனியொரு பாணியை வளர்த்துக் கொண்டவர்களே, உறுதியான இடத்தை பிடித்துள்ளார்கள். சிரிப்போடு சிந்தனைகளையும் கலந்து தந்த கலைவாணர் என்.எஸ்.கே.வின் பாணியை பின்பற்றி, போட்டி நிறைந்த திரையுலகில் தன்னை தக்க வைத்துக் கொண்டார் விவேக்.

இளமையான காமெடியனாகவே திகழ்ந்த விவேக், புதுமுகங்கள் அறிமுகமாகும் படம் தொடங்கி, உச்ச நட்சத்திரம் வரும் நாயகனின் தோழனாக திரைப்படங்களில் வலம் வந்தார்.

வடிவேலுவுடனும் இணைந்து காமெடியில் கலக்கிய விவேக், நகைச்சுவை பாத்திரங்களில் வடிவேலுவின் ஆதிக்கத்திற்குப் பின்னரும் தன்னைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய சவாலை வெற்றிகரமாக எதிர்கொண்டவர்.

நகைச்சுவை நடிகர் என்பதோடு, குணச்சித்திர வேடங்களிலும், வெள்ளைப்பூக்கள் வேடத்தில் பிரதான கதாபாத்திரத்திலும் நடித்துப் பெயர் வாங்கினார்.

சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் கோலோச்சிய விவேக், சுமார் 230 படங்களில் நடித்துள்ளார். உன்னருகே நானிருந்தால், பூவெல்லாம் உன் வாசம், அந்நியன், சிங்கம், உத்தம புத்திரன், பெண்ணின் மனதைத் தொட்டு, பட்ஜெட் பத்மநாபன் உள்ளிட்ட படங்கள் இன்றளவும் நகைச்சுவைக்கு உத்தரவாதமாக உள்ளன.

திரைத் துறையில் மட்டுமல்லாமல், பொதுப் பணிகளில் ஈடுபட்டு, சமூகச் செயல்பாட்டாளராகத் திகழ்ந்தவர் என்பதுதான், விவேக்கிற்கு திரைத்துறையை தாண்டி தனி அடையாளத்தை கொடுத்தது. மறைந்த, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மீது மிகுந்த மதிப்புக் கொண்டு, அவரது நினைவுப் பட்டறை அமைத்து, மனித நேயக் கருத்துகளை எடுத்துரைத்தார். தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான மரக் கன்றுகளை ஊன்றி வளர்த்தார். சுற்றுச் சூழல் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு, பிளாஸ்டிக் தடை மற்றும் கொரோனா பற்றிய விழிப்புணர்வு என முன்மாதி மனிதனாகவும் திகழ்ந்தவர் விவேக்.

பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று சமூக அக்கறையுடன் உரையாற்றி, இளைஞர்களுக்கு ஊக்கமூட்டியவர். தென்மாவட்டங்களில் ஒரு முறை உரையாற்றியபோது, இளைஞர்கள் ஹார்டுவேரை கைவிட்டு, சாஃப்ட்வேரை கையில் எடுக்க வேண்டும் என தமக்கேயுரிய நகைச்சுவை பாணியில் குறிப்பிட்டார்.

கலைத்துறையில் இவருடைய ஈடு இணையற்ற பங்களிப்பிற்காக மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது, தமிழக அரசால் வழங்கப்படும் கலைவாணர் விருது மற்றும் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருதுகள், பெரியார் விருது என எண்ணற்ற விருதுகளைப் பெற்ற சிறப்புக்குரியவர்.

கலைச் சேவையாலும் சமூக சேவையாலும் அழுத்தமான தடம் பதித்துச் சென்றுள்ள விவேக் மறைவு, தமிழ் திரைப்படத் துறைக்கும், ரசிகர்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் மிகப் பெரிய இழப்பாகும். திடீர் மரணத்தின் மூலம் சோகத்தில் ஆழ்த்தி விட்டு மறைந்தாலும், விவேக்கின் நகைச்சுவைகள் உலகத் தமிழர்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்திருக்கும்...

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments