கொரோனா தடுப்பூசியால் நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்படவில்லை - மருத்துவர்கள் விளக்கம்
நடிகர் விவேக்கிற்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் எக்மோ கருவியுடன் உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. விவேக்கிற்கு ஏற்பட்டுள்ள மாரடைப்பிற்கும், அவருக்கு போடப்பட்டுள்ள தடுப்பூசிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தமிழக சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனது வீட்டில் இருந்தபோது, வெள்ளிக்கிழமை காலையில், விவேக்கிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில், சென்னை வடபழனியில் உள்ள சிம்ஸ் தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு எக்மோ கருவி உதவியுடன், உயிர்காக்கும் சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மாலை 5.30 மணியளவில், சென்னை வடபழனி சிம்ஸ் மருத்துவமனை நிர்வாகம், விவேக் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டது. அதில், காலை 11 மணியளவில், சுய நினைவு இல்லாத சூழலில், தங்கள் மருத்துவமனைக்கு விவேக் அழைத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவருக்கு இதய இரத்த நாளாங்களில் அடைப்பு கண்டறியப்பட்டு, ஆன்ஜியோபிளாஸ்டி மற்றும் அவசரகால ஆன்ஜியோகிராம் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. விவேக்கின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், சிம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
நடிகர் விவேக்கின் உடல்நிலை குறித்து விசாரித்தறிந்த சுகாதாராத்துறைச் செயலாளர் இராதாகிருஷ்ணன், சிம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களுடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய சிம்ஸ் மருத்துவக்குழுவினர், நடிகர் விவேக்கின் இதயத்தின் இடதுபுற ரத்தக்குழாயில் 100 விழுக்காடு அளவிற்கு அடைப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தனர். இதன் காரணமாகவே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், இதனால், மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டம் மிகவும் குறைந்துள்ளதாகவும் மருத்துவர்கள் கூறினர்.
அப்போது பேசிய சுகாதாரத்துறைச் செயலாளர் இராதாகிருஷ்ணன், விவேக்கிற்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது கவலையளிப்பதாகவும், இதற்கும், கொரோனா தடுப்பூசிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் கூறினார்.
நடிகர் விவேக் குணமடைய பிரார்த்திப்பதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேமுதிக தலைவர் விஜயகாந்த், மக்கள் நீதிமய்யத் தலைவர் கமல்ஹாசன் உள்பட பலரும் தெரிவித்துள்ளனர்.
Comments