அய்யம்பேட்டை : போலீஸ் நிலையத்தில் பெண் போலீசை பலாத்காரம் செய்ய முயன்ற போலீஸ்காரர்!
அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் பெண் போலீசை பலாத்காரம் செய்ய முயன்ற ஆண் காவலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக உமாமகேஸ்வரி உள்ளார். சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ஏட்டுகள் மற்றும் காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த போலீஸ் நிலையத்தில் திருவையாறு தாலுக்கா அம்மன்பேட்டையைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர் போலீசாக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளன.
கொரோனா தொற்று பரவல் காரணமாக முகக்கவசம் அணியாதவர்களை பிடிப்பதற்காக அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த ஆயுதப்படையை சேர்ந்த பெண் போலீசார் பணியமர்த்தப்பட்டனர். இவர்கள் 3 பேருக்கும் உணவு உள்ளிட்ட தேவையான பொருட்களை காவலர் முருகானந்தம் வாங்கி கொடுத்து வந்துள்ளார். கடந்த 13ஆம் தேதி இரவு அய்யம்பேட்டை காவல் நிலைய மாடியில் 3 பெண் போலீசாரும் சாப்பிட்டுவிட்டு தங்கள் அறையில் ஓய்வெடுத்ததனர்.
அப்போது காவல் நிலையத்தில் பணியில் இருந்த முருகானந்தம். போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அறையில் தூங்கிக் கொண்டிருந்த பெண் போலீஸ் ஒருவரை வேலை இருப்பதாக அறையை விட்டு வெளியே வருமாறு அழைத்துள்ளார். அறையை விட்டு வெளியே வந்த அந்தப் பெண் போலீசை முருகானந்தம் கையைப் பிடித்து இழுத்து கட்டி அணைத்து பலவந்தமாக பலாத்கார முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதிர்ச்சியடைந்த பெண் போலீஸ் முருகானந்தத்திடம் இருந்து போராடி தப்பி விட்டார். பின்னர், இந்த சம்பவம் குறித்து தனது சக பெண் போலீசாரிடம் இதுகுறித்து கூறி கதறி அழுதுள்ளார்.
உடனடியாக மூன்று பெண் போலீசாரும் ஆயுதப்படை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் தேஷ்முக் சேகர் சஞ்சயிடம் ஆயுதப் படை பிரிவு உயர் அதிகாரிகள் புகார் தெரிவித்தனர். அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாமகேஸ்வரி முருகானந்தம் மீது பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு பதிவு செய்தார். முருகானந்தத்தை கைது செய்து தஞ்சாவூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். தொடர்ந்து, அவர் பாபநாசம் கிளை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
Comments