பிரபல நகைச்சுவை நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு - எக்மோ கருவியின் உதவியுடன் சிகிச்சை
நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டு, சென்னை வடபழனியில் தனியார் மருத்துவமனையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு எக்மோ கருவியின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழக மக்களின் மனம் கவர்ந்த காமெடி நடிகர்களில் விவேக்கிற்கு முக்கிய இடம் உண்டு. நகைச்சுவை நடிகர் என்பதைத் தாண்டி, சமூக ஆர்வலராகவும், மரம் வளர்ப்பு, கொரோனா தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும் பரவலாக கவனம் பெற்று வருபவர் நடிகர் விவேக்.
இவர் தமது சாலிக்கிராமம் வீட்டிலிருந்தபோது, இன்று காலை 11மணியளவில் மூச்சுத்திணறல் மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. அவரது மகள் உடனடியாக வடபழனி சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டிருந்த நிலையில், மருத்துவர்கள் அதற்கான முதல் கட்ட சிகிச்சைகளை அளித்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர். இதயத்திற்கு செல்லும் ரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டது பரிசோதனையில் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, ரத்த குழாயில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்ய ஸ்டெண்ட் வைக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரத்த ஓட்டத்தை இயக்கும் இதயம்-நுரையீரலின் செயல்பாடுகள் பலவீனமாக இருப்பதால், எக்மோ எனப்படும் வெளிப்புறக் கருவி மூலம், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர் விவேக்கின் உடல்நிலை குறித்து மருத்துவமனை இன்று மாலை அறிக்கை வெளியிடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதில் விவேக்கிற்கு ஏற்பட்ட பாதிப்பு, சிகிச்சை முறைகள் குறித்த விவரங்கள் முழுமையாக வெளியாகும்.
இதனிடையே, மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் விவேக் விரைவில் பூரண நலம்பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதாக, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
சமூக அக்கறை கொண்ட கருத்துகளை மனதில் பதிய வைப்பதிலும், சேவைகள் செய்வதிலும் முதலிடத்தில் திகழும் விவேக் பூரண நலம்பெற வேண்டும் என விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். சின்னக் கலைவாணர் விவேக் விரைந்து நலம்பெற வேண்டும், மனிதர்களின் மாரடைப்பை தடுக்கும் நகைச்சுவைக் கலைப் பணியை வாழ்நாள் எல்லாம் தொடர வேண்டும் என வைரமுத்து கூறியுள்ளார்.
நடிகர் விவேக் விரைந்து நலம்பெற வேண்டும் என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, நடிகர் சரத்குமார் உள்ளிட்டோரும் தெரிவித்துள்ளனர்.
நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி கேட்டு மிக மனவேதனை அடைந்ததாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நடிகர் விவேக் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதாகக் கூறியுள்ளார்.
Comments