தமிழகத்தில் கொரோனா 2வது அலை தீவிரம்: கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து தலைமைச் செயலாளர் ஆலோசனை
கொரோனா பரவலை கட்டுப்படுத்த கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் கொரோனா தொற்று தினசரி பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. தொற்று அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு ஏற்கெனவே விதித்துள்ளது. ஆனாலும், நாள்தோறும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, அதிகரித்து வருவதால், கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது.
இந்நிலையில், தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், டிஜிபி திரிபாதி, சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வார இறுதி நாட்களில் ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு குறித்தும், ஏற்கனவே அமலில் உள்ள கட்டுப்பாடுகளில் நேர கட்டுப்பாடுகளை மாற்றி அமைப்பது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை கூடுதல் பாதுகாப்பு அம்சங்களோடு நடத்துவதா அல்லது ஒத்திவைப்பதா என்பது குறித்து முடிவெடுக்கப்படலாம் என கூறப்படுகிறது. இதுதொடர்பான அறிவிப்புகள் இன்று மாலை வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments