செம்பு கம்பியில் திருக்குறள்..! 3ம் வகுப்பு படித்தவரின் சாதனை முயற்சி
கடலூரில் 3ம் வகுப்புடன் பள்ளிப்படிப்பை பாதியுடன் நிறுத்திக் கொண்ட நபர் ஒருவர் மெல்லிய செம்பு கம்பியில் திருக்குறளை வடிவமைத்து கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
சிறு துரும்பையும் அழகிய பொருளாக மாற்றும் படைப்பாற்றல் வெகுசிலரிடமே இருக்கும். பாறையிலும், மண்ணிலும் என பலப்பொருட்களில் கலைவண்ணம் காணும் கலைஞர்களிடையே, கடலூரை சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் வித்தியாசமாக செம்பு கம்பியில் திருக்குறளை வடிவமைத்து வருகிறார்.
கடலூர் மாவட்டம் கூத்தப்பாக்கம் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் 3ம் வகுப்புடன் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளார். அதன்பின்னர் குழந்தை பருவத்தில் இருந்தே சிறு கம்பிகள் மூலம் தான் விரும்பிய வடிவத்தினை செய்யும் பழக்கத்தை ஜெயக்குமார் ஏற்படுத்தி வந்துள்ளார்.
நாளடைவில் எளிதாக வளையும் தன்மை கொண்ட செம்புக் கம்பியை பயன்படுத்தி டாலர், கீ செயின், பெயர்கள் என பல பொருட்களை செய்து வந்துள்ளார். தனது கலையின் மீது அதீத ஆர்வம் கொண்ட ஜெயக்குமார், உலகப்பொதுமறையாம் திருக்குறளை செம்பு கம்பியில் வடிவமைக்க எண்ணி அதற்கான பணியிலும் ஈடுபட்டுள்ளார்.
இரண்டடி திருக்குறளை எந்தவித இணைப்பும் இன்றி ஒரே செம்பு கம்பியில் வளைத்து வடிவமைத்துள்ளார். முதலடியின் 4 வார்த்தைகளும், இரண்டாம் அடியின் 3 வார்த்தைகளும் இணைந்தபடி கோர்வையாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
இதேபோன்று வள்ளுவனின் 1330 குரல்களையும் செம்பு கம்பியில் வடிவமைத்து கின்னஸ் சாதனை படைக்க உள்ளதாக ஜெயக்குமார் கூறியுள்ளார். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் விரும்பும் பொருட்களை செம்பு கம்பியில் செய்து கொடுத்து வருமானம் ஈட்டி வரும் ஜெயக்குமாரின் இந்த புதிய முயற்சிக்கு நண்பர்கள் ஆதரவு அளித்துள்ளனர்.
Comments