கொரோனா காரணமாக தஞ்சை பெரியகோயிலில், மே-15 வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை
கொரோனா பரவல் காரணமாக, தஞ்சாவூர் பெரியக்கோயிலில் இன்று முதல் அடுத்த மாதம் 15-ம் தேதி வரை பக்தர்கள், சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் கொரோனா காரணமாக, தொல்லியல் துறை கட்டுப்பாட்டிலுள்ள புராதான சின்னங்கள், கோவில்கள், அருங்காட்சியகங்களை மூட மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, தஞ்சை பெரியக்கோயிலிலுள்ள 4 நுழைவு வாயில்களும் தடுப்புகள் வைத்து மூடப்பட்டுள்ளன.
இதனால் வெளியூரில் இருந்து வந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். அதே சமயம் கோயிலில் வழக்கம் போல் பூஜைகள் நடைபெறும் என்றும் பணியாளர்கள், சிவாச்சாரியர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டிலுள்ள புராதான சின்னங்கள், கோயில்கள் மூடப்பட்டுள்ளன. மத்திய தொல்லியல்துறை கட்டுப்பாட்டின்கீழ் வரும் அனைத்து புராதான சின்னங்கள், அருங்காட்சியகங்கள் வரும் மே-15ம் தேதி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பிரசித்தி பெற்ற தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலில் அர்ச்சகர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். நாமக்கல் மலைகோட்டையில் உள்ள நாமகிரி தாயார், நரசிம்மர் கோயில், அரங்கநாதர் கோயில்கள் மூடப்பட்டன. காஞ்சிபுரத்தில் 108 வைணவ தளங்களில் ஒன்றான வைகுண்ட பெருமாள் கோவில் உள்ளிட்ட 7 கோயில்கள் மத்திய தொல்லியல் துறையின் உத்தரவின்படி மூடப்பட்டுள்ளன.
Comments