கொரோனா தடுப்பூசியில் அலட்சியம்: கோவேக்சின்... கோவிஷீல்டை கலந்து போட்ட அவலம்! 

0 14697

உத்தரப்பிரதேச மாநிலத்தில் மருத்துவ அதிகாரிகளின் அலட்சியத்தால், டிரைவர் ஒருவருக்கு கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரண்டையும் கலந்து போடப்பட்ட  சம்பவம் அம்மாநில மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, இந்தியா முழுவதும் உள்ள சுகாதார பணியாளர்களுக்கு முதல்கட்டமாக கொரோனா தடுப்பூசியான  கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் செலுத்தும் பணி கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் தேதி தொடங்கப்பட்டது. தற்போது நாடு  முழுவதும் கொரோனா  இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால், ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் 'தடுப்பூசி திருவிழா' என்ற பெயரில், தடுப்பூசி போடும் பணிகளை  மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த டிரைவர் ஒருவருக்கு போடப்பட்ட தடுப்பூசியின் முதல் டோஸ் கோவேக்சினாகவும், இரண்டாவது டோஸ் கோவிஷீல்டாகவும்  கலந்து போடப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், மகாராஜ்கஞ்ச் என்ற மாவட்டத்தைச் சேர்ந்த உமேஷ், சந்தன் குஷ்வஹா மற்றும் அர்தாலி மதன் ஆகிய மூன்று பேரும், மகாராஜ்கஞ்ச் மாவட்ட  அரசு அதிகாரி ஒருவருக்கு டிரைவராக பணியாற்றி வருகின்றனர்.

அதிகாரியின் அறிவுறுத்தலின்பேரில் இவர்கள் மூன்று பேரும் கடந்த மாதம், தடுப்பூசி போட்டுக் கொண்டனர். முதல் டோஸாக அவர்கள் 3 பேருக்கும் அப்போது கோவேக்சின்  தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது.

இந்த நிலையில், குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் இரண்டாவது டோஸ் தடுப்பு மருந்தைப் போட்டுக் கொள்வதற்காக,  அருகிலுள்ள சுகாதார மையத்துக்கு உமேஷ்  சென்றார். அங்கு அவருக்கு இரண்டாவது டோஸாக, முதல் டோஸில் செலுத்தப்பட்ட அதே கோவேக்சின் தடுப்பு மருந்தைச் செலுத்துவதற்குப் பதிலாக, கோவிஷீல்டு மருந்து  செலுத்தப்பட்டது.

மருந்து செலுத்தப்பட்ட பின்னர், அதற்காக அனுப்பப்பட்ட சான்றிதழ் மூலம் இந்த விவரம் தெரியவந்ததையடுத்து உமேஷ் பயந்து போனார். தனக்கு ஏதாவது பக்க  விளைவுகள் ஏற்பட்டு விடுமோ என, அவர் தடுப்பூசி போட்டுக்கொண்ட மையத்துக்குச் சென்று, சுகாதாரத் துறை அதிகாரியிடம் முறையிட்டார். அவர், " எதுவும் நடக்காது.  பயப்பட வேண்டாம்" என ஆறுதல் கூறி அனுப்பி வைத்தார்.

ஆனாலும், உமேஷ் தொடர்ந்து கவலையுடன் இருந்ததால், அவரது சக டிரைவர் நண்பர்கள் அதுகுறித்து கேட்டனர். அப்போதுதான் உமேஷ், தனக்கு இரண்டு தடுப்பூசி  மருந்துகளும் கலந்து போடப்பட்ட விவரத்தை தெரிவித்தார்.

அதனைக் கேட்டு அச்சமுற்ற அவர்கள் இரண்டு பேரும், இரண்டாவது டோஸ் தடுப்பு மருந்தைப் போட்டுக்கொள்ளாமல் இருக்கின்றனர். இந்த நிலையில், இது குறித்த தகவல்  மெல்ல மெல்ல வெளியில் கசிந்து, மாநிலம் முழுவதுமே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி ஸ்ரீவஸ்தவா, "இரண்டு மருந்துகளும் கலந்து போடப்பட்டுள்ளதால் பக்க விளைவுகள் ஏதும்  ஏற்படாது. இருப்பினும் இப்படியான ஒரு கவனக்குறைவை தவிர்த்திருந்திருக்கலாம். ஒருவருக்கு முதல் டோஸில் எந்த வகையான மருந்து கொடுக்கப்பட்டதோ, அதையே  இரண்டாவது டோஸ் கொடுக்கும்போதும் செலுத்த வேண்டும் என சுகாதாரத் துறை பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது"  எனத் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி யைப் போட்டுக் கொள்வதில் ஒருபிரிவினர் ஏற்கெனவே தயக்கம் காட்டி வரும் நிலையில், இது மாதிரியான குளறுபடிகள் அரங்கேறினால், அது அவர்களை மேலும் அச்சத்துக்குள்ளாக்கி விடும் எனக் கவலை தெரிவிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments