வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை

0 9474
வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை

வளிமண்டலத்தில் நிலவும் சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

சென்னையின் புறநகர் பகுதிகளாக ஆவடி, அம்பத்தூர், பாடி, திருமுல்லைவாயில், பட்டாபிராம், திருநின்றவூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

 தேனி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்ட நிலையில், இன்று அதிகாலையில் கருமேகங்கள் சூழ மிதமான மழை பெய்தது.

கோவையில் நள்ளிரவில் பெய்த மழையால், சாலைகளில் குளம் போல் தண்ணீர் தேங்கியது. உக்கடம், ரேஸ்கோர்ஸ், சிங்காநல்லூர், பீளமேடு உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு பலத்த மழை பெயதது. இதன் காரணமாக, ரயில் நிலையம் அருகே உள்ள பாலம், மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பாலத்தின் கீழ் தண்ணீர் குளம் போல் தேங்கியது. வாகன ஓட்டிகள், வாகனத்தை தள்ளிக் கொண்டே செல்லும் நிலை ஏற்பட்டது.

கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. கும்பகோணம், சோழபுரம், திருப்பனந்தாள், தத்துவாஞ்சேரி, அணைக்கரை உள்ளிட்ட பகுதிகளில் 2 மணிநேரத்திற்கும் பெய்த பலத்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. தொடர்ந்து அப்பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் குளிர்ந்த காற்று வீசி வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலையில் இருந்தே இடியுடன் கூடிய கனமழை பெய்தது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் உருவானது.

நீலகிரி: மாவட்டத்தில் தொடர்ந்து 3-வது நளாக மழை பெய்தது. வளிமண்டலத்தில் நிலவும் சுழற்சி காரணமாக, கடந்த 3 நாட்களாக நீலகிரி மாவட்டத்தின் கோத்தகிரி, குன்னூர், மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இன்றும், சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக மிதமான மழை பெய்தது. உறைபனி காரணமாக செடி கொடிகள் மரங்கள் காய்ந்து கருகி போய், காட்டு தீ ஏற்பட கூடிய நிலை நீடித்து வந்த நிலையில் தற்போது பெய்து வரும் மழை காரணமாக காட்டு தீ அபாயம் நீங்கியுள்ளது. கடந்த மூன்று நாட்களில் நீலகிரியில் 692 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

ராமநாதபுரத்தில் கடந்த 2 நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்த நிலையில், சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. கருமேகங்கள் சூழ பெய்த கனமழை காரணமாக, வாகன ஒட்டிகள் பகலிலும் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சென்றனர்.

சேலம் மாவட்டம் அம்மாபேட்டை, பட்டை கோவில், நான்கு ரோடு , 5 ரோடு, அஸ்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் சுற்று வட்டார பகுதிகளான அத்தனூர், வெண்ணந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் மழை கொட்டி தீர்த்தது. சில இடங்களில் மிதமான மழையும் பெய்தது

அரியலூர் மாவட்டம் செந்துறை சுற்றுவட்டார பகுதியில் மாலை நேரத்தில் திடீரென பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்சியடைந்தனர்.

தஞ்சையில் கரந்தை திருவையாறு கண்டியூர் கருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் காலை முதல் நிலவி வந்த கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது..

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments