தொடங்கியது மீன்பிடித் தடைக்காலம்.... கரைகளில் வரிசை கட்டும் விசைப்படகுகள்!

0 6304
தொடங்கியது மீன்பிடித் தடைக்காலம்.... கரைகளில் வரிசை கட்டும் விசைப்படகுகள்!

தமிழகம் முழுவதும் கடற்கரையோர மாவட்டங்களில் மீன்பிடித் தடைக்காலம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், தடைக்கால நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

சென்னை காசிமேடு துறைமுகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் கரையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. படகுகளை சுத்தம் செய்து பழுது நீக்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த பல மாதங்களாக மீன்பிடிக்கச் செல்லவில்லை என்றும் படகுகளை பராமரிக்க, நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

 

நாகை மாவட்டத்தில் கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை, நாகூர், செருதூர் உள்ளிட்ட 64 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் விசைப்படகுகளை கரையேற்றும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அடுத்த 61 நாட்களுக்கு படகுகளை பழுதுபார்த்தல், வலைகளை சீரமைத்தல் போன்ற பல்வேறு பணிகளில் ஈடுபடவுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

 

தூத்துக்குடியில் 250க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. படகுகளை பராமரித்தல், மீன் வலைகள் பின்னுதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடத் தொடங்கி இருக்கும் மீனவர்கள், தடைக்கால நிவாரணத் தொகை தடையின்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments