மீண்டும் இந்தியில் ஷங்கர்..! அந்நியன் படத்தை ரீமேக் செய்யவுள்ளதாக அறிவிப்பு

0 3550
மீண்டும் இந்தியில் ஷங்கர்..! அந்நியன் படத்தை ரீமேக் செய்யவுள்ளதாக அறிவிப்பு

2005ம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற அந்நியன் திரைப்படத்தை ஹிந்தியில் ரீக் மேக் செய்ய அதில் ரன்வீர் சிங் நாயகனாக நடிப்பதை இயக்குனர் சங்கர் உறுதிப்படுத்தியுள்ளார்.

தனது படத்தில் பிரமாண்டத்தை கொடுத்து பிரமாண்ட இயக்குனர் என பெயர் பெற்றவர் ஷங்கர். தொழில்நுட்பம் மூலம் தனது படத்தில் பிரமாண்டம் காட்டும் ஷங்கர் கமல் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் - 2 படத்தையும், ராம் சரண் நடிக்கும் பெயரிடப்படாத படம் ஒன்றிற்கும் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த இரண்டு படங்களையும் தவிர்த்து ஹிந்தி நடிகர் ரன்வீர் சிங்-ஐ வைத்து விக்ரம் நடித்து வெற்றிபெற்ற அந்நியன் படத்தை எடுக்க ஷங்கர் முடிவெடுத்துள்ளார்.

சாதுவாகவும், காதலிக்கும் ரோமியோவாகவும், ஆக் ஷன்களில் மிரட்டும் அந்நியனாகவும் என 3 கேரக்டரில் நடித்த விக்ரம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். தவறிழைத்தவர்களுக்கு கருடபுராணத்தில் வழங்கப்படும் தண்டனைகளை கருவாக கொண்டு எடுக்கப்பட்ட அந்நியனுக்கு இன்றளவும் ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் அந்நியன் திரைப்படம் வெளிவந்து 15 ஆண்டுகள் கடந்த நிலையில் அது ஹிந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. இதனை ஷங்கர் இயக்க பென் ஸ்டுடியோஸ் சார்பில் டாக்டர் ஜெயந்திலால் காடா தயாரிக்கிறார்.

அந்நியனின் ஹிந்தி ரீமேக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில் அந்நியனாக நடிக்க ரன்வீர் சிங் ஒப்பந்தமாகியுள்ளார். திரைக்கதையையும், கதாப்பாத்திரத்தின் முக்கியத்துவத்தையும் ரன்வீர் சிங்கிடம் பகிர்ந்து கொள்ளும் புகைப்படத்தை ஷங்கர் தனது டிவிட்டரிலும், பேஸ்புக் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். மேலும், ”அந்நியனை இந்தியில் ரீமேக் செய்யவேண்டுமென்றால் அந்தப் பாத்திரத்துக்கு ஏற்ற திறமையான, கவர்ந்திழுக்கக் கூடிய ஒருவர் தேவை.

அப்படிப்பட்ட ஒரு திறமை ரன்வீர் சிங்கிடம் இருப்பதை நான் கண்டுகொண்டேன். தனது அற்புதமான நடிப்பின் மூலம் இரு பாத்திரங்களுக்கு உயிரூட்டக் கூடியவர் ரன்வீர். இந்தியா முழுவதிலும் உள்ள ரசிகர்களுக்காக அந்நியனை ரீமேக் செய்ய மிகுந்த ஆவலுடன் இருக்கிறேன்” என ஷங்கர் கூறியுள்ளார்.

அந்நியனின் ரீமேக் படப்பிடிப்பு 2022ம் ஆண்டின் இடையில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments