கொரோனா 2ஆவது அலையை முழுவீச்சில் எதிர்கொள்ளும் இந்தியா..!
நாடு முழுவதும், கொரோனா 2ஆவது அலை வீசும் நிலையில், கடந்தாண்டில் கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில், அனைத்து வகையிலும் முழுவீச்சில் தயாராகி, பெருந்தொற்று பரவலை இந்தியா எதிர்கொண்டிருக்கிறது. அதேவேளையில், அரசு மட்டுமே இயங்காமல், கொரோனா பரவலை தடுக்க, நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி இயக்கம், திருவிழாவாக முன்னெடுக்கப்படுகிறது.
கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. கொரோனா நோயாளிகளுக்குப் தேவைப்படும் ரெம்டிசிவர், டோசில்சுமாஃப் மருந்துகளும் போதியளவில் கையிருப்பில் உள்ளன. ஒவ்வொரு மாநிலமும், கொரோனா பரவல் வேகமெடுத்துள்ள நிலையில், கூடுதல் மருத்துவர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்களை நியமித்துள்ளது.
கடந்த ஓர் ஆண்டில், கூடுதலாக 50 ஆயிரம் ஐசியூ படுக்கைவசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதேபோன்று, உயிர்க்காக்கும் சிகிச்சைக்கான வெண்டிலேட்டர்கள், போதியளவில் அனுமதிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் மொத்தமுள்ள 741 மாவட்டங்களில், 659 மாவட்டங்களில் ஆர்டி-பிசிஆர் சோதனை நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் ஆர்டி-பிசிஆர் முறையில் 100% அளவில் கொரோனா பரிசோதனை நடைபெறுகிறது. என்-95 மாஸ்க்குள், பிபிஇ கிட்டுகள் உட்பட கொரோனா தடுப்பு உபகரணங்கள் தயாரிப்பில், உலகளவில் 2ஆவது பெரிய உற்பத்தியாளராக இந்தியா மாறியிருக்கிறது.
இவை ஒருபுறம் இருக்க, கடந்தாண்டில், கொரோனா தொற்று காலத்தில் கடுமையான விதிமுறைகளுடன் அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கால், பெருந்தொற்று பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. ஆனால், ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட உடன், கூட்டம், கூட்டமாக மக்கள் பொது இடங்களில் திரண்டதால், மீண்டும் 2ஆவது அலை தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.
வீட்டை விட்டு வெளியில் வந்தால் மாஸ்க் அணிவது, தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட நோய் தடுப்பு விதிமுறைகளை, பெரும்பாலானோர் காற்றில் பறக்கவிட்டது முக்கிய காரணம் என்கின்றனர், சுகாதாரத்துறை வல்லுநர்கள்....
மாஸ்க் அணிவது, தனிநபர் இடைவெளி குறித்து பேசும் அரசியல்வாதிகள், தாங்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில், பிரச்சார கூட்டங்களில், கூட்டத்தை கூட்டியதும், கொரோனா பரவல் அதிகரிக்க வழிவகுத்துவிட்டதாக ஆதங்கப்படுகின்றனர், மருத்துவ வல்லுநர்கள்....
திருமணங்கள் உள்ளிட்ட நிகழ்வுகளில், தனிநபர் இடைவெளியின்றி கூட்டமாக கூடுவதால், கொத்து, கொத்தாக கொரோனா பாதிப்பு பரவ காரணமாவிட்டதாகவும், மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர்.
நாட்டில் 2ஆவது அலையில், கொரோனா பரவல் வேகமெடுக்க, உருமாறிய இங்கிலாந்து கொரோனா வைரசும் முக்கிய காரணியாக திகழ்வதாக, மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்தாண்டை விட இருமடங்கு பெருந்தொற்று பாதிப்பு உறுதியானாலும், இம்முறை, கொரோனா தடுப்பூசிகள் மட்டுமே நம்பிக்கை அளிக்கின்றன.
இருப்பினும், மாஸ்க் அணிவது, தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பது, சானிடைசர் பயன்பாடு உள்ளிட்ட கொரோனா தடுப்பு வழிமுறைகளுடன் சுயக் கட்டுப்பாடுகள் மட்டுமே, கொரோனா பரவலின் 2ஆவது அலை வெல்வதற்கான வழிகள் என சுட்டிக்காட்டுகின்றனர், மருத்துவ வல்லுநர்கள்..!
Comments