ரஷ்யாவில் இருந்து இந்தியா வருகிறது 10 கோடி ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள்
அவசரகால பயன்பாட்டுக்கு ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த மத்திய அரசின் நிபுணர் குழு அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, 10 கோடி தடுப்பூசிகள் ரஷ்யாவில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.
கோவிஷீல்டு, கோவேக்ஸின் தடுப்பூசிகளை பயன்படுத்த இந்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆணையம் கடந்த ஜனவரியில் அனுமதி வழங்கியது. கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் நாடு முழுவதும் இந்த 2 கரோனா தடுப்பூசிகளும் போடப்பட்டு வருகிறது.
சீரம், பாரத் பயோடெக் நிறுவனங்கள் இணைந்து மாதந்தோறும் 4 கோடி கரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்கின்றன. தற்போதைய நிலையில் இந்தியாவுக்கு மாதந்தோறும் குறைந்தபட்சம் 7 கோடி கரோனா தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன.
இதனை கருத்தில்கொண்டு அவசர கால பயன்பாட்டுக்கு ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் சிறப்பு நிபுணர் குழு அனுமதி வழங்கியுள்ளது. அடுத்த கட்டமாக இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆணையம் ரஷ்ய தடுப்பூசிக்கு அனுமதி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்யாவின் கமலேயா இன்ஸ்டிடியூட் கண்டுபிடித்துள்ள ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு 59 நாடுகள் அனுமதி வழங்கியுள்ளன. இந்தியாவில் பரிசோதனை மேற்கொள்வதற்காக ஹைதராபாத்தைச் சேர்ந்த டாக்டர் ரெட்டிஸ் லேபரேட்டரீசுடன் கடந்த செப்டம்பரில் ஒப்பந்தம் கையெழுத்தானது. 3-ம் கட்ட 'ஸ்புட்னிக் வி' பரிசோதனை வெற்றி கரமாக நிறைவு பெற்றுள்ளதன் அடிப்படையில் அந்த தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி 10 கோடி 'ஸ்புட்னிக் வி' தடுப்பூசிகள் ரஷ்யாவில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.
ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசி 91.6 சதவீதம் அளவுக்கு பலன் அளிக்கும் என்பது சர்வதேச ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியை சேமித்து வைப்பதும், எடுத்துச் செல்வதும் எளிது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments