சரவெடியாய் சதம் கண்ட அறிமுக கேப்டன்... தோற்றாலும் கொண்டாடும் நெட்டிசன்கள்!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தோற்றாலும் அணியின் வெற்றிக்காக கடைசி வரை போராடிய கேப்டன் சஞ்சு சாம்சனை பலரும் பாராட்டி வருகின்றனர்.
14வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 4வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதனாத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதிக் கொண்டன. பஞ்சாப் தனது அணியின் பெயரையே மாற்றியிருந்த நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது கேப்டனையே மாற்றி களமிறங்கியது.
டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அறிமுக கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல் ராகுலும், மயங்க் அகர்வாலும் களமிறங்கினர். தனது முதல் ஐபிஎல் தொடரில் களம் காணும் சேட்டன் சக்காரியா ராஜஸ்தான் பெளலிங்கை தொடங்கி வைத்தார். முஸ்தாபிசுரின் பந்துவீச்சில் தப்பி பிழைத்த மயாங்க், சக்கரியா வீசிய அடுத்த ஓவரில் கேட்சாகி வெளியேறினார். அடுத்து தன் பங்கிற்கு புயல் பேட்டிங்கால் புழுதி பரப்பி ஸ்டோக்சிடம் கேட்சாகி யுனிவர்சல் பிக்பாஸ் கெயில் 40 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அதன் பின்னர் நுழைந்த தீபக் ஹூடா 28 பந்தில் 4 பவுண்டரிகள், 6 சிக்சர்கள் என நாலாப்புறமும் வூடு கட்ட ஆட்டத்தில் சூடு பறந்தது.
இதனையடுத்து கேப்டன் கே.எல் ராகுல் தனி ஆளாய் தாண்டவம் ஆட பஞ்சாப் அணி 200 ரன்களை கடந்தது. எப்படியும் சதம் அடித்துவிடுவார் என்று ஆவலோடு ரசிகர்கள் காத்திருக்க, பவுண்டரி லைனில் திவாட்டியா பிடித்த அசத்தலான ரிலே கேட்சால் ஏமாற்றத்துடன் வெளியேறினார் கே.எல்.ராகுல். இதனையடுத்து 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுக்கு 221 ரன்கள் குவித்தது பஞ்சாப் கிங்ஸ் அணி.
இமாலய இலக்கை துரத்தி களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு டக் அவுட்டாகி ஆரம்பமே அதிர்ச்சி அளித்தார் பென் ஸ்டோக்ஸ். இதனைத் தொடர்ந்து களமிறங்கினார் கேப்டன் சஞ்சு சாம்சன். இவருடன் ஜோஸ் பட்லரும் நல்ல கம்பெனி கொடுத்து சிறப்பாக ஆட அணியின் ஸ்கோர் சீரான வேகத்தில் உயர்ந்தது. இந்நிலையில் சீரான இடைவெளியில் வீரர்கள் பெவிலியன் திரும்ப கேப்டன் சஞ்சு சாம்சன் ஆட்டத்தில் தீப்பொறி பறந்தது. நாலாப்புறமும் பவுண்டரிகள், சிக்சர்கள் என பறக்கவிட்டு ஐபிஎல் கிரிக்கெட் அரங்கில் தனது மூன்றாவது மற்றும் இந்த சீசனின் முதல் சதத்தை பதிவு செய்தார் அறிமுக கேப்டன் சஞ்சு சாம்சன்.
இந்த நிலையில் அர்ஷ்தீப்சிங் வீசிய கடைசி ஓவரில் அணியின் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. முதல் மூன்று பந்துகளில் 2 ரன்கள் எடுத்த நிலையில், நான்காவது பந்தை சாம்சன் சிக்சருக்கு அனுப்பினார். ஐந்தாவது பந்தில் ரன் எடுக்கவில்லை. கடைசி ஒரு பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ரசிகர்கள் இதயத்துடிப்பு எகிற, பவுண்டரி லைனில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் சாம்சன். இதன் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
பஞ்சாப் அணி போட்டியில் வெற்றிப் பெற்றாலும் தனி ஒருவனாய் ஆட்டத்தின் இறுதி வரை அசராமல் போராடிய அறிமுக கேப்டன் சஞ்சு சாம்சனை ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர். இந்த போட்டியில் சதம் அடித்ததன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் கேப்டனாக அறிமுகமான முதல் போட்டியிலேயே சதம் கண்ட முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும் ஐபிஎல் போட்டியில் அதிக சதமடித்த இந்திய வீரர்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார் சஞ்சு சாம்சன்.
Comments