"வாடிக்கையாளர்களிடமிருந்து எஸ்பிஐ வங்கி ரூ.300 கோடி அநியாய வசூல்!" - மும்பை ஐஐடி புகார்

0 48883

ஜீரோ பேலன்ஸ் சேமிப்பு கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களிடமிருந்து எஸ்பிஐ வங்கி, தேவையில்லாமல் 300 கோடி ரூபாய்க்கு அதிகமான தொகையை வசூலித்துள்ளதாக மும்பை ஐஐடி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஏடிஎம்-மில் மாதம் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் சேவை கட்டணம், பண பரிவர்த்தனைக்கு கட்டணம், ரயில் டிக்கெட் புக்கிங், மொபைல் போன் ரீசார்ஜ் போன்ற ஆன்லைன் சேவைகளுக்கு வாடிக்கையாளர்களிடமிருந்து வங்கிகள் வசூலிக்கிற கட்டணம் குறித்து நீண்ட நாட்களாகவே புகார்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. மேலும் சேவை கட்டணம் என்ற பெயரில் வங்கிகள் அவ்வப்போது மாற்றியமைக்கிற விதிமுறைகள், வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவர்களுக்கு பெரும்பாலும் தெரியாமலேயே போய், வீணாக பண இழப்பும் ஏற்படும் நிலை ஏற்படுகிறது.

இது தவிர, கணக்கு வைத்துள்ள வங்கி பெருநகரத்தில் இருக்கிறதா, நகரத்தில் இருக்கிறதா அல்லது கிராமப்புறத்தில் இருக்கிறதா என்பதைப் பொறுத்து, வங்கி கணக்கில் வைக்க வேண்டிய மினிமம் பேலன்ஸ் தொகையும் வெவ்வேறாக நிர்ணயிக்கப்படுகிறது. குறிப்பாக தனியார் வங்கிகள் பெருநகரம் என்றால் 10,000,  நகரம் என்றால் 5,000, கிராமம் என்றால் அதற்கு குறைவான தொகை என நிர்ணயித்துள்ளன. இந்த தொகை குறையும்போது வங்கிகள், சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களின் கணக்கிலிருந்து, எவ்வளவு தொகை குறைவாக இருக்கிறதோ, அதற்கு ஏற்ப அபராத தொகையை வசூலிக்கின்றன.

எஸ்பிஐ போன்ற பொதுத் துறை வங்கிகளிலும் இந்த மினிமம் பேலன்ஸ் தொகை, வங்கிக்கு வங்கி மாறுபடுகின்றன. இந்த நிலையில், நகர்ப்புறங்கள் மற்றும் பெரு நகரங்களில் குறைந்த சம்பளத்துக்கு வேலை பார்க்கும் பணியாளர்களால், வங்கிகள் குறிப்பிடும் அளவுக்கான மினிமம் பேலன்ஸ் தொகையை வைத்துக் கொள்ள முடியாத நிலை இருப்பதாக மத்திய அரசுக்கு புகார்கள் வந்தன. இதை கருத்தில் கொண்டும், வங்கி கணக்கு இல்லாத ஏழை எளிய மக்கள் வங்கி கணக்குத் தொடங்க ஏதுவாகவும் 

'பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா' திட்டத்தின், ஜீரோ பேலன்ஸ் வங்கி கணக்கு தொடங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

இதனால், நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் இந்த திட்டத்தின் கீழ் வங்கி கணக்கு உள்ளவர்களாக மாறினர். அரசு திட்டம் என்பதால், வங்கிகள் இதை வேறு வழி இல்லாமல் செயல்படுத்தின. ஆனாலும், இந்த வாடிக்கையாளர்களிடமிருந்தும்  சேவை கட்டணம் என்ற பெயரில் ஏதாவது தொகையை வங்கிகள் வசூலித்துக் கொண்டுதான் உள்ளன.

 அந்த வகையில், நாடு முழுவதும் 44 கோடிக்கு மேலான வாடிக்கையாளர்களைக் கொண்ட பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ, ஜீரோ பேலன்ஸ் சேமிப்பு கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களிடமிருந்து, தேவையில்லாமல் 300 கோடி ரூபாய்க்கு அதிகமான தொகையை வசூலித்துள்ளதாக மும்பை ஐஐடி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

 அதாவது ஜீரோ பேலன்ஸ் சேமிப்பு கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள், மாதம் ஒன்றுக்கு நான்கு முறைக்கு மேல் பணம் எடுத்தால், ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் எஸ்பிஐ வங்கி, 17.70 ரூபாய் கட்டணம் வசூலித்துள்ளது.

 இப்படி எஸ்பிஐ வங்கி, வாடிக்கையாளர்களிடமிருந்து தேவையில்லாமல் 2015-20 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மட்டும் 12 கோடி கணக்குகளில் இருந்து 300 கோடி ரூபாயை  வசூலித்துள்ளதாக ஐஐடி ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மினிமம் பேலன்ஸ் இல்லாத வாடிக்கையாளர்களிடம் இருந்து எஸ்பிஐ வங்கி அளவுக்கு மீறி கட்டணம் வசூலித்துள்ளதாக மும்பை ஐஐடி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதேபோன்று இரண்டாவது பெரிய பொதுத் துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி 2015-20 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 9.9 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாகவும், ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை மீறி சில வங்கிகள் கட்டணம் வசூலித்து வருவதாகவும் இந்த ஆய்வில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments