சுருக்கு கம்பியில் சிக்கிய நாய்... குட்டிகள் பசியில் தவிக்கும் பரிதாபம்!
மூணாறில் சுருக்கு கம்பியில் சிக்கிய நாய் ஒன்று குட்டிகள் பெற்றெடுத்த நிலையில் உயிருக்காக போராடி வருகிறது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பழைய மூணாறில் சில நாள்களாக கர்ப்பமாக இருந்த நாயின் கழுத்தில் சுருக்குகம்பி சிக்கிக் கொண்டது. இந்த நிலையில், அந்த நாய் அப்படியே குட்டியும் ஈன்றது. ஐந்து குட்டிகள் பிறந்துள்ள நிலையில், கழுத்தில் உள்ள சுருக்கு கம்பியை யாராலும் அகற்ற முடியவில்லை. இதனால், நாய் சாப்பிட முடியாமலும் தன் குட்டிகளுக்கு பால் கொடுக்க முடியாமலும் தவித்து வந்தது. குட்டிகள் கண் விழிக்காத நிலையில் அவற்றால் தாயிடத்தில் பால் குடிக்க முடியாமல் பட்டினியில் வாடுகின்றன.
இது குறித்து மூணாறு நகராட்சி ஊழியர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால், அவர்களாலும் நாயை நெருங்க முடியவில்லை. குட்டிகள் இருப்பதால் நாயை நெருங்குவோரை கடித்து விடும் அபாயமும் உள்ளது. இதையடுத்து வனவிலங்கு ஆர்வலர்கள் சார்பில் மூணாறு வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வனத்துறையினர் தாய்நாய்க்கு மயக்க ஊசி செலுத்தி அதன் கழுத்தை இறுக்கியிருக்கும் சுருக்கு கம்பியை அகற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
Comments