சிகரெட் பிடித்ததால் வந்த விபரீதம்..! பற்றி எரிந்த சானிடைசரால் தீக்காயங்களுடன் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி
கிருமிநாசினியை கொண்டு கைகளை சுத்தப்படுத்தியப்பின் சிகரெட் பற்ற வைத்த நபர் மீது தீப்பற்றி எரிந்ததால் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொரோனா தொற்று மீண்டும் வேகமெடுத்த நிலையில் கைகளை சானிடைசர் கொண்டு அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டும் எனவும், முகக்கவசம் அணிய வேண்டும் எனவும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் சார்பிலும், அரசு தரப்பிலும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றில் இருந்து தற்காத்து கொள்ள வீடு, அலுவலகங்கள் என அனைத்துப் பகுதிகளிலும் சானிடைசர் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
கொரோனா பரவலை தடுக்க சானிடைசரை பயன்படுத்தினாலும், அதனை பாதுகாப்புடன் கையாள வேண்டும் என்ற விழிப்புணர்வு மக்களிடையே இல்லாமல் உள்ளது. ஏனெனில் சானிடைசரை பயன்படுத்தி விட்டு அலட்சியம் காரணமாக சிகரெட் பற்ற வைத்த முதியவர், மீது தீப்பற்றிய சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது.
சென்னை அசோக் நகரை சேர்ந்த 50 வயதான ரூபன் என்பவர் கோடம்பாக்கம் டாக்டர் சுப்ராயன் நகரில் உள்ள அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் இயங்கி வரும் பதிப்பகத்தில் வேலை பார்த்து வருகிறார்.
அலுவலக வேலையாக வெளியே சென்றுவிட்டு மீண்டும் அலுவலகத்திற்கு வந்த ரூபன் கைகளை சானிடைசரை கொண்டு சுத்தம் செய்துள்ளார். சானிடைசரை தனது கைகளில் அழுத்தும் போது அதிலிருந்து சில துளிகள் அவரது சட்டையில் விழுந்துள்ளன. பின்னர், புகைப்பிடிக்கும் பழக்கும் கொண்ட ரூபன் அலுவகத்தில் உள்ள கழிவறைக்கு சென்று தன்னிடம் இருந்த லைட்டரை எடுத்து சிகரெட் பற்ற வைத்துள்ளார். கைகளை மறைத்துக் கொண்டு லைட்டர் மூலம் சிகரெட் பற்ற வைத்தபோது போது அவரது கைகளில் இருந்த சானிடைசர் பற்றி எரிந்தது. பதறிய ரூபன் கைகளில் இருந்த நெருப்பை அணைப்பதற்காக தனது சட்டையில் தேய்த்துள்ளார். முன்னதாக அவரது சட்டையிலும் சானிடைசரின் துளிகள் விழுந்திருந்ததால் சட்டையும் பற்றி எரிந்தது.
வலியால் ரூபன் அலறித்துடிக்க அலுவலகத்தில் இருந்தவர்கள் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று அவரை மீட்டனர். கைகள், கழுத்து, மார்பு மற்றும் வயிற்றுப்பகுதிகளில் தீக்காயமடைந்த ரூபனுக்கு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அசோக் நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சானிடைசர் வைரஸ் தொற்றை தவிர்த்தாலும், அதற்கு எளிதில் தீப்பற்றக்கூடிய தன்மை உடையது என்ற விழிப்புணர்வு இல்லாமல் ரூபன் அலட்சியமாக செயல்பட்டதே அவரின் இந்த நிலைக்கு காரணமாக உள்ளது. வைரஸ் தொற்றை தவிர்க்க உதவும் சானிடைசரில் 60 சதவீதத்திற்கு மேலாக ஈத்தைல் ஆல்கஹால் (Ethyle alcohol) உள்ளதால் எளிதாக தீப்பற்றக்கூடிய தன்மை உள்ளது.
எனினும் சானிடைசர் பயன்படுத்திய சில விநாடிகளில் அது உலர்ந்து விடுவதால் எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படுவதில்லை. மாறாக சானிடைசரை பயன்படுத்தி விட்டு தீப்பற்றக்கூடிய செயல்களில் ஈடுபட்டால் அசம்பாவிதம் ஏற்படுகிறது. இந்த நிலையில் சானிடைசர் மூலம் கைகளை சுத்தப்படுத்தி விட்டு சமையல் வேலைகளிலோ அல்லது தீப்பற்றக்கூடிய செயல்களிலோ ஈடுபட்டக்கூடாது என எச்சரிக்கும் மருத்துவர்கள், கைகளில் கிருமி நாசினியை பயன்படுத்தினால் சோப்பு போட்டு கைகளை நன்கு கழுவிய பிறகே சமையல் வேலைகளில் ஈடுபட வேண்டுமென அறிவுறுத்தியுள்ளனர்.
Comments