பழமை வாய்ந்த சிவன் கோவில் நந்தி சிலைக்குள் ரூ.60 கோடிக்கு வைரக்கற்கள்... சல்லி சல்லியாக உடைத்த கும்பல் அதிரடி கைது!
ஆந்திராவில் 60 கோடி ரூபாய் மதிப்புள்ள வைரக்கற்கள் இருப்பதாக நம்பி நந்தி சிலையை திருடி உடைத்த 10பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் பாபா . இவர், மாந்தரீகத்தில் நாட்டம் கொண்டவர். நள்ளிரவு பூஜைகளில் ஈடுபடுவதும் பாபாவின் வழக்கமாக இருந்துள்ளது. சித்தூர் மாவட்டத்தில் ஸ்ரீகாளகஸ்தி அடுத்த கத்தாடா கிராமத்தைச் சேர்ந்த ஹரி என்பவர் பாபாவிடத்தில் சிஷ்யராக இருந்துள்ளார். இவர்கள் இருவரும் சேர்ந்து ஸ்ரீகாளகஸ்தி அருகேயுள்ள தேவலம்பேட்டையில் உள்ள பழமை வாய்ந்த சிவன் கோயிலில் இருக்கும் நந்தி சிலையில் 60 கோடி ரூபாய் மதிப்புள்ள வைர கற்கள் இருப்பதாக கதை கட்டியுள்ளனர்.
தொடர்ந்து வேலவேடு கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் , வெங்கடாஜலபதி, ஸ்ரீதர் ,தொட்டம் பேடு மண்டலத்தை சேர்ந்த ரங்க பாபு ஆகிய நான்கு பேரின் உதவியுடன் பாபா மற்றும் ஹரியும் இணைந்து கடந்த மாதம் 26ஆம் தேதி நள்ளிரவு ஆட்டோவில் சென்று நந்தி சிலையை திருடினர். பின்னர் கங்கா புரத்தைச் சேர்ந்த முனீந்திரா என்பவரின் விவசாய நிலத்தில் அதை மறைத்து வைத்தனர். மறுநாள் காலை சிலையை எடுக்கச் சென்ற போது ரங்கபாபு மட்டும் உடன் வரவில்லை. இதையடுத்து மற்றவர்கள் சிலையை எடுக்க சென்றனர். தோட்டத்தில் உரிமையாளர் மற்றும் வேலைக்காரர்கள் நடமாட்டம் இருந்ததால், திரும்பி சென்று விட்டனர்.
பின்னர் 28ஆம் தேதி அங்கு சென்று பார்தத போது நந்தி சிலையை காணவில்லை. இதற்கிடையே ரங்க பாபு மற்றோரு கும்பலுடன் சேர்ந்து நந்தி சிலையை கடத்தியுள்ளார். ரங்கபாபு சிலையை உடைத்து பார்த்த போது உள்ளே வைரமும் இல்லை... தங்கமும் இல்லை. இதனால், அதிர்ச்சியும் விரக்தியுமடைந்த அந்த கும்பல் உடைக்கப்பட்ட நந்தி சிலையை காளஹஸ்தி அருகே ஓடும் ஸ்வர்ணமுகி ஆற்றில் வீசி விட்டு ஓடி விட்டனர்.
இந்நிலையில் கடந்த 4- ஆம் தேதி நந்தி சிலை மாயமானதாக கோவில் பூசாரி பலமநேர் போலீசில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து, நெல்லூர் மாவட்டம் வெங்கடகிரி அருகில் வெங்கடேஷ், வெங்கடாஜலபதி, ஸ்ரீதர் ,ரங்க பாபு, மந்திரவாதி பாபா ,ஹரி, பிரகாஷ் ,ரவி ,தசர தய்யா , நரசிம்மலு ஆகிய 10 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த கும்பலை சேர்ந்த கோபி கடந்த 9ஆம் தேதி சாலை விபத்தில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
Comments