ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் காலமானார்
கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் உயிரிழந்தார்.
சட்டமன்ற தேர்தலில் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில், காங்கிரஸ் சார்பில் மாதவராவ் போட்டியிட்டார். வேட்பு மனு தாக்கல் செய்து 2 நாட்கள் மட்டுமே பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவருக்கு, கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து நுரையீரலிலும் பாதிப்பு ஏற்பட்டதால், மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு பதிலாக அவரது மகள் திவ்யா ராவ் தொகுதி முழுவதும் பிரச்சாரம் செய்தார்.
சிகிச்சையில் இருக்கும் போதே மாதவ்ராவுக்கு 2 முறை மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனிடையே, வாக்கு எண்ணிக்கையில், மாதவராவ் வெற்றி பெற்றால், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் மறைவுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மாதவராவ் உயிரிழந்த செய்தியைக் கேட்டு மிகவும் மன வேதனை அடைந்தாகவும், அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்பதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
மாதவராவ் குடும்பத்தினர் மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கு ஆறுதலை தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், பொது வாழ்வில் ஈடுபடும் அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். துணை முதலமைச்சர் ஓ.பன்னிர்செல்வம், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோரும், மாதவராவ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
Comments