ஆசிரியர் தேர்வில் முறைகேடா? 9 அதிகாரிகளுக்கு ஓய்வு கொடுக்க பரிந்துரை
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வுகளில் வெளிப்படைத்தன்மையை கடைபிடிக்கவில்லை என்பதால், 2011ஆம் ஆண்டு முதல் 2020 வரை அதன் தலைவர்களாக இருந்த 9 ஐஏஎஸ் அதிகாரிகளை கட்டாய ஓய்வில் அனுப்புமாறு மாநில தகவல் ஆணையம் தமிழக தலைமை செயலாளருக்கு பரிந்துரைத்துள்ளது.
உதவிப்பேராசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர் பதவிகளுக்கு தேர்வு எழுதியவர்கள், தேர்வுக்கான விடைகளை, வாரியம் எந்த புத்தகத்தில் இருந்து தேர்ந்தெடுத்தது?, சரியான விடைகளுக்கு ஏன் மதிப்பெண் வழங்கவில்லை? என்பன உள்ளிட்ட கேள்விகளை தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் கீழ் எழுப்பினர். இது குறித்து தமிழ்நாடு தகவல் ஆணையம் பல கட்ட விசாரணைகளை நடத்தியது.
அதில், ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த சில ஆண்டுகளாக நடத்திய தேர்வுகளில், கேள்விகள் வடிவமைப்பு,விடைக்குறிப்புகளை தயாரித்தல் உள்ளிட்ட பல விவகாரங்களில் வெளிப்படைத்தன்மையை கடைப்பிடிக்கவில்லை என்பது தெரியவந்ததாக மாநில தகவல் ஆணையர் தமிழக அரசுக்கு தெரிவித்துள்ளார். இதையடுத்து கடந்த 2011 முதல், கடந்த ஆண்டு அக்டோபர் வரை வாரியத்தின் தலைவர்களாக இருந்த ஐஏஎஸ் அதிகாரிகள் 9 பேரை கட்டாய ஓய்வில் அனுப்ப வேண்டும் என மாநில தகவல் ஆணையத்தின் ஆணையர் பொறுப்பு வகிக்கும் முத்துராஜ் தமிழக தலைமைச் செயலருக்கு பரிந்துரை கடிதம் அனுப்பி உள்ளார்
Comments