மேற்கு வங்கத்தில் நான்காம் கட்ட வாக்குப்பதிவு!

0 1690
மேற்கு வங்கத்தில் நான்காம் கட்ட வாக்குப்பதிவு!

மேற்கு வங்கச் சட்டமன்றத் தேர்தலில் இன்று நான்காம் கட்டமாக 5 மாவட்டங்களில், 44 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒன்பதரை மணி நிலவரப்படி 16 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன.

294 உறுப்பினர் கொண்ட மேற்குவங்கச் சட்டப்பேரவைக்கு 8 கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படுகிறது. முதல் மூன்று கட்டங்களில் மொத்தம் 91 தொகுதிகளில் தேர்தல் முடிந்துள்ளது. இன்று நான்காம் கட்டமாகக் கூச்பிகார், அலிப்பூர்துவார், தெற்கு 24 பர்காணாக்கள், ஹவுரா, ஹூக்ளி ஆகிய 5 மாவட்டங்களில் 44 தொகுதிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 44 தொகுதிகளிலும் மொத்தம் 373 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வாக்குச்சாவடிக்கு வரும் அனைவருக்கும் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படுகிறது. பொதுமக்கள் போதிய இடைவெளிவிட்டு வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

சுஞ்சுரா தொகுதி பாஜக வேட்பாளர் லாக்கட் சாட்டர்ஜி கோவிலில் வழிபாடு நடத்திவிட்டு வாக்குச்சாவடிக்குச் சென்றார். பாஜக சார்பில் போட்டியிடும் பாபுல் சுப்ரியோ, பாயல் சர்க்கார் ஆகியோர் தங்கள் தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்குச் சென்று வாக்குப்பதிவைப் பார்வையிட்டனர்.

கூச்பிகாரின் நட்டபாரி தொகுதி திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளர் ரவீந்திரநாத் கோஷ் தலைக்கவசம் அணிந்துகொண்டு தொகுதியை வலம் வந்தார். தகாத நிகழ்வுகளைத் தவிர்க்கத் தலைக்கவசம் அணிந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

கூச்பிகாரில் சித்தல்குச்சியில் வாக்களிக்க வரிசையில் நின்ற இளைஞர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார். அவரைத் துப்பாக்கியால் சுட்டவர் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

ஹூக்ளியில் பாஜக வேட்பாளர் லாக்கெட் சாட்டர்ஜியின் கார் மீது ஒரு குழுவினர் தாக்குதல் நடத்தினர். பாதுகாப்புக்கு நின்ற மத்தியப் படையினர் வன்முறையாளர்களைத் தடுத்து விரட்டினர். இந்த நிகழ்வின்போது ஊடகத்துறையினரின் வாகனங்களும் தாக்குதலுக்குள்ளாகின. 

கூச்பிகார் மாவட்டத்தில் மாதாபங்கா என்னுமிடத்தில் பாஜகவினர், திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது மத்தியப் படையினர் துப்பாக்கியால் சுட்டதில் வாக்களிக்க வரிசையில் நின்ற இளைஞர் மீது குண்டு பாய்ந்து அவர் உயிரிழந்தார். மேலும் மூவர் காயமடைந்தனர். இதேபோல் சித்தல்குச்சி என்னுமிடத்தில் பாஜகவினர் - திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டபோது மத்தியப் படையினர் துப்பாக்கியால் சுட்டதில் மேலும் மூவர் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்தார். 

மேற்குவங்கத்தின் கூச்பிகார் சித்தல்குச்சியில் துப்பாக்கிச் சூடு நிகழ்ந்தது குறித்துத் தேர்தல் பார்வையாளர்கள் ஆணையத்துக்கு இடைக்கால அறிக்கை அனுப்பியுள்ளனர். அதன் அடிப்படையில் 126ஆவது வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விரிவான அறிக்கை அளிக்கும்படி தேர்தல் பார்வையாளர்களுக்கும் தலைமைத் தேர்தல் அதிகாரிக்கும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments